
வெளிநாடு செல்ல அனுமதி கோருவதற்கு முன்பு, மோசடி குற்றச்சாட்டில் ரூ. 60 கோடியைச் செலுத்துங்கள் என ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 மற்றும் 2023 ஆகிய காலகட்டத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா தன்னிடமிருந்து ரூ. 60 கோடியைப் பெற்றதாக தீபக் கோதாரி தெரிவித்துள்ளார். தொழிலை விரிவுபடுத்தவே இந்தப் பணம் எனப் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்பணத்தை முதலில் கடனாக வாங்கிக் கொண்டு, பிறகு முதலீட்டாக மாற்றியுள்ளார்கள் என்று கூறப்படுகிறது. பெஸ்ட் டீல் டிவி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்காக இந்தப் பரிவர்த்தனை நடந்துள்ளது. ரூ. 60 கோடியானது ஏப்ரல் 2015-ல் ரூ. 31.95 கோடி, செப்டம்பர் 2015-ல் ரூ. 28.53 கோடி என இரு தவணைகளாக வழங்கப்பட்டுள்ளன.
பணத்தைத் திருப்பி கொடுப்பது குறித்து கடந்த ஏப்ரல் 2016-ல் ஷில்பா ஷெட்டி எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் 12% ஆண்டு வட்டியுடன் பணம் திருப்பி கொடுக்கப்படும் எனவும் தீபக் கோதாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சில மாதங்களிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷில்பா ஷெட்டி விலகியிருக்கிறார். மேலும், ரூ. 1.28 கோடி மதிப்புடைய தீர்க்கப்படாத வழக்கு ஒன்று நிறுவனத்தின் மீது இருந்தது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் தீபக் கோதாரி குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என மறுத்துள்ளார்கள்.
இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் 14 அன்று மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றங்களுக்கான பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக மும்பை காவல் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளது.
இருவரும் அமெரிக்கா செல்ல அனுமதி கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் அனுமதி அல்லது விசாரணை ஆணையத்தின் அனுமதி இல்லாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.
அக்டோபர் 25 முதல் அக்டோபர் 29 வரை நடைபெறும் யூடியூப் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் எனக் கோரி முறையிட்டிருக்கிறார்கள். இதற்கு அழைப்பிதழ் உள்ளதா என மும்பை உயர் நீதிமன்றம் கேள்வியெழுப்பியிருக்கிறது.
ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "அலைபேசி வாயிலாகவே அழைப்பு வந்துள்ளதாகவும், பயணம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றால் மட்டுமே முறையான அழைப்பிதழ் கிடைக்கப்பெறும்" என்றார். இருந்தபோதிலும், இவர்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்த மும்பை உயர் நீதிமன்றம், அமெரிக்கா செல்ல அனுமதி கோருவதற்கு முன்பு மோசடி குற்றச்சாட்டில் ரூ. 60 கோடியைச் செலுத்துங்கள் என்று உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை அக்டோபர் 14 அன்று விசாரணைக்கு வருகிறது.
குடும்பத்துடன் விடுமுறையைக் கழிப்பதற்காக தாய்லாந்து செல்ல அனுமதி கோரி இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முன்பு முறையிட்டிருந்தார்கள். நிலுவையில் உள்ள வழக்குகளைக் காரணம் காட்டி மும்பை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் அனுமதி மறுத்தது.
Shilpa Shetty | Bombay High Court | Raj Kundra |