
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணம் சம்பாதிப்பதற்காக திரைப்படங்களில் ஆபாசமாக நடித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துக்கான தேர்தல் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ஸ்வேதா மேனன் ஜூலை 24 அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 31.
ஜூலை 31 அன்று தான் ஸ்வேதா மேனன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்வேதா மேனன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டு வருகிறது. ஸ்வேதா மேனன் மீதான புகாருக்கு இது காரணமாக இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த மார்டின் என்பவர் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரானது காவல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பணம் சம்பாதிப்பதற்காக படங்களில் ஆபாசக் காட்சிகளில் நடிப்பதாகவும் கவனத்தை ஈர்ப்பதற்காக அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரணை தொடங்கப்படும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தன் மீதான வழக்குப்பதிவை ரத்து செய்யக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்வேதா மேனன் வழக்குத் தொடர்ந்தார். தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கிய படங்கள் மற்றும் விளம்பரங்களைக் குறிப்பிட்டே புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தான் நடித்துள்ள கான்டம் விளம்பரமும் சான்றிதழ் பெறப்பட்ட பொதுவெளியில் உள்ளது தான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆபாச படங்கள் மற்றும் ஆபாச தளங்கள் எதிலும் தனக்கு எந்தப் பங்களிப்பும் தொடர்பும் கிடையாது என்பதையும் ஸ்வேதா மேனன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், ஸ்வேதா மேனன் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. முறையான நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Swetha Menon | AMMA | Kerala High Court | Association of Malayalam Movie Artists |