
மஹா கும்பமேளா மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்த மோனாலிசா என்ற இளம்பெண்ணைத் தேடி சினிமா வாய்ப்பு வந்துள்ளது.
மஹா கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப் பிரதேசத்துக்கு ருத்ராட்ச மாலைகள் விற்க வந்தவர் இந்தூரைச் சேர்ந்த இளம் பெண் மோனாலிசா. மஹா கும்பமேளாவுக்கு வந்த சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், மோனாலிசாவைப் படம் பிடித்து பதிவேற்றம் செய்ய, இந்தியா முழுக்கப் பிரபலமடைந்தார் மோனாலிசா. தோற்றம், கண்கள், உடல்மொழி, பேச்சு என பலவிதங்களிலும் அனைவரையும் ஈர்த்தார்.
சமூக ஊடகங்கள் வழியாகப் பிரபலமானதைத் தொடர்ந்து, மஹா கும்பமேளாவில் மோனாலிசாவைத் தேடி கூட்டம் அலைமோதியது. இந்தப் பிரபலம் அவருடைய தொழிலுக்குப் பின்னடைவாகவே அமைந்ததுடன் அவருடன் இணைந்து செல்பி எடுப்பதற்காக வரும் ரசிகர்களின் தொல்லையும் அதிகரித்துள்ளது.
மோனாலிசாவை விரைவில் நடிகையாகவும் காண சந்தர்ப்பம் அமைந்துள்ளது. சனோஜ் மிஸ்ரா இயக்கும் The Diary of Manipur என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது. மோனாலிசா இப்படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் பேசியுள்ளார். மோனாலிசாவும், என் வீட்டில் அனுமதித்தால் நிச்சயம் படங்களில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.
இதுபோன்ற வாய்ப்புகளால் 10 நாள்களில் 10 கோடி ரூபாய் பணம் ஈட்டியதாக மோனாலிசா குறித்து வதந்திகள் பரவத் தொடங்கின. இதை முற்றிலும் மறுத்த மோனாலிசா, என்னிடம் அவ்வளவு பணம் இருந்தால், நான் ஏன் கும்பமேளாவில் மாலைகள் விற்றுக்கொண்டிருக்கிறேன். பிரபலமானதால் வியாபாரம் சரிவர நடக்கவில்லை. 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்க வேண்டிய நிலைமை உருவானது என்று பதிலளித்துள்ளார். எல்லோரும் மோனாலிசாவிடம் செல்பி எடுக்கத்தான் வருகிறார்கள். மாலைகளை யாரும் வாங்குவதில்லை என்று அவருடைய தந்தையும் தங்கள் வாழ்வின் யதார்த்த நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.