
சென்னை வேளச்சேரியில் நடந்த கார் விபத்தில், சின்னத்திரை நடிகர் கார்த்திக்கின் மகன் நித்திஷ் ஆதித்யா உயிரிழந்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை நடிகர் கார்த்திக். அவரது மகன் நித்திஷ் ஆதித்யா தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, நேற்று (அக்.31) மாலை தனது நண்பர்களுடன் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள விளையாட்டு திடலுக்குக் காரில் சென்றுள்ளார் நித்தீஷ். அதன் பிறகு இன்று அதிகாலை 2 மணி அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, வேளச்சேரி-தரமணி 100 அடி சாலையில் நித்தீஷின் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச் சுவரில் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த நித்திஷ் மற்றும் காரில் இருந்த அவரது நண்பர்களான ஜெய் கிருஷ்ணன் மற்றும் வெங்கட் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் நித்தீஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
அதன்பிறகு நித்தீஷின் உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கார் விபத்து குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.