
எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் தமிழ்ப் பட மீம் ஒன்றை பகிர்ந்தது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
ஓபன்ஏஐ நிறுவனத்துடன் கைகோர்த்து தங்களுடைய சாதனங்களில் சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைக் கொண்டுவருவது குறித்த அறிவிப்பை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து ஓபன்ஏஐ நிறுவனத்துடன் ஆப்பிள் நிறுவனம் கைகோர்த்தால், தங்களுடைய நிறுவனங்களில் ஆப்பிள் சாதனங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக மீம் ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார் எலான் மஸ்க். அதில் 2017-ல் வெளியான ‘தப்பாட்டம்’ என்கிற தமிழ்ப் படத்தின் காட்சியை எலான் மஸ்க் பகிர்ந்தது உலக அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில் தமிழ்ப் படத்தின் காட்சி ஒன்று மீமாக உலக அளவில் பரவியதற்காக அப்படத்தில் நடித்த துரை சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துரை சுதாகர், “எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் நான் நடித்த ‘தப்பாட்டம்’ படத்தின் காட்சியைப் பகிர்ந்துள்ளார். இதை தமிழ்ப் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நான் நினைக்கிறேன். இதற்காக எலான் மஸ்க்குக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு உதவியாக இருந்த மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி” என்றார்.