சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் தோன்றியதற்காக நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, மஞ்சு லட்சுமி, பிரகாஷ் ராஜ், நிதி அகர்வால், அனன்யா நாகல்லா உள்பட மொத்தம் 29 பிரபலங்கள் மீது அமலாக்கத் துறை அண்மையில் வழக்குப்பதிவு செய்தது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள சைபராபாத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.
ராணா டகுபதி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் ஜங்லி ரம்மியின் விளம்பரத்துடன் தொடர்புடையவர்கள் என்றும் விஜய் தேவரகொண்டா A23 உடனும் மஞ்சு லட்சுமி யோலோ 247 உடனும் பிரணீதா ஃபேர்பிளேயுடனும் மற்றும் நிதி அகர்வால் ஜீத் வின் உடனும் தொடர்புடையவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகர்கள் ராணா டகுபி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி ஆகியோருக்கு அமலாக்கத் துறை அனுப்பியுள்ளது. தகவலறிந்த வட்டாரங்கள் படி ராணா டகுபதி ஜூலை 23-ல் ஆஜராக வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் ஜூலை 30-ல் ஆஜராக வேண்டும் என்றும் விஜய் தேவரகொண்டா ஆகஸ்ட் 6-ல் ஆஜராக வேண்டும் என்றும் மஞ்சு லட்சுமி ஆகஸ்ட் 13-ல் ஆஜராக வேண்டும் என அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேற்கொண்டு பிரபலங்கள் பலருக்கும் அழைப்பாணையை அனுப்ப அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான தனது நிலைப்பாட்டை விளக்கும் விதமாக, தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்ட பிரகாஷ் ராஜ், 2016-ல் ஒரு கேமிங் செயலியை விளம்பரப்படுத்தியதாகவும், ஆனால் அது பொருத்தமற்றது என்பதை உணர்ந்த பிறகு 2017-ல் அதில் இருந்து பின்வாங்கியதாகவும் கூறினார். மேலும், "அப்போதிருந்து, நான் எந்த கேமிங் செயலிகளையும் விளம்பரப்படுத்தவில்லை, காவல்துறையினர் அணுகினால் பதிலளிப்பேன்" என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.
Betting App Case | Betting App Scam | Illegal Betting App Case | Prakash Raj | Vijay Deverakonda | Rana Daggubati | Manchu Lakshmi | Enforcement Directorate | ED