த்ரிஷ்யம் 3 படத்தை மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் ஜீது ஜோசஃப் தெரிவித்துள்ளார்.
மோகன் லால், ஜீது ஜோசஃபின் த்ரிஷ்யம் படம் மலையாளத்தைத் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல் ஹாசன் நடித்தார். த்ரிஷ்யம் படத்தை மலையாளத்திலேயே பலர் பார்த்திருந்தாலும், ரீமேக் செய்யப்பட்ட படங்களும் வெற்றி கண்டன.
இந்த வெற்றி த்ரிஷ்யம் 2 எடுக்க வழிவகுத்தது. இதுவும் தமிழ் தவிர தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி கண்டது. ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக த்ரிஷ்யம் மூன்றாவது பாகம் குறித்த அறிவிப்பை படக் குழு வெளியிட்டது. இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றவுள்ளதாக வெளியான தகவலை இயக்குநர் ஜீது ஜோசஃப் மறுத்துள்ளார்.
மனோரமா ஆன்லைனிடம் பேசிய அவர் கூறியதாவது:
"மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்துவது சாத்தியமானதாகத் தெரியவில்லை. நான் இன்னும் கதை, திரைக்கதை எழுதி வருகிறேன். மற்ற மொழிகளில் என்னுடைய எழுத்துப் பணி நிறைவடைவதற்காகக் காத்திருக்கிறார்கள். நான் எழுதி முடித்தவுடன் கதை, திரைக்கதையை அவர்களிடத்தில் கொடுப்பேன். அவர்களுடைய மொழிக்கேற்ப அவர்கள் மாற்றம் செய்துகொள்வார்கள். த்ரிஷ்யம் முதலிரண்டு பாகங்களிலும் இதுபோன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. ஆனால், மூலக் கதை என்னுடையது.
மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. மோகன் லால் தேதி கிடைக்கும்போது, மற்ற திரைத் துறையிலுள்ள முன்னணி நடிகர்களின் தேதி கிடைக்காது. இருந்தபோதிலும், மூன்று மொழிகளிலும் உருவாகும் த்ரிஷ்யம் 3 படத்தை ஒரே நேரத்தில் வெளியிடுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஓடிடி தளத்தில் வெளியான பிறகு, மக்கள் அனைவரும் படத்தைப் பார்த்துவிடுவார்கள். எனவே, மற்ற மொழிகளில் வெளியாகும் த்ரிஷ்யம் 3 படத்தைப் பாதிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனால், மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
ஹிந்தியில் படத்தை இயக்கும் அபிஷேக் கொச்சியில் என்னைச் சந்தித்தார். எப்போது கதையை ஒப்படைக்க முடியும் என அவர் என்னிடம் கேட்டார். படம் பற்றி சமூக ஊடகங்களில் வெளியாகும் ஊகங்களைத் தடுப்பது சாத்தியமற்றதாக உள்ளது" என்றார் ஜீது சோசஃப்.