டிராகன் படம் திரைக்கு வருவதற்கு முன்பே தங்களுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்துள்ளார்.
கோமாளி, லவ் டுடே புகழ் பிரதீப் ரங்கநாதன் தற்போது அஷ்வத் இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பிப்ரவரி 21 அன்று திரைக்கு வருகிறது.
படம் வெளியாக இன்னும் ஒரு வார காலமே இருப்பதால், படத்தின் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படக் குழுவினர் ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்களுக்குப் பேட்டியளித்து வருகிறார்கள். பிஹைண்ட்வுட்ஸுக்கு அளித்த பேட்டியில், டிராகன் படம் தங்களுக்கு லாபம் ஈட்டித் தந்துவிட்டதாக அர்ச்சனா கூறியுள்ளார்.
"டிராகன் படத்தைப் பொறுத்தவரை எங்களுக்கு லாபம் தான். ஓடிடி உள்பட திரையரங்குகள் சாராத அனைத்து உரிமங்களும் ஏற்கெனவே விற்பனையாகிவிட்டன. திரையரங்குகள் மூலம் வரும் வருவாய் அனைத்தும் லாபம் தான். இரு மடங்கு அல்லது மூன்று மடங்கு லாபம் இருக்குமா, 30% முதல் 40% லாபம் இருக்குமா, எந்தளவுக்கு லாபம் இருக்கும் என்பதுதான் எங்களுக்குத் தெரியாது" என்றார்.
கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அர்ச்சனா கூறுகையில், "டிராகன் படத்தில் வெற்றி, தோல்வி குறித்துப் பேசியிருக்கிறோம். வெற்றியை எப்படி அடைய முடியும் என்பது பற்றி பேசியிருக்கிறோம். இன்றையத் தலைமுறைக்கு மிகவும் தொடர்புடைய ஒரு கருத்து. இந்தப் படத்தை எண்ணி நான் பெருமையடைகிறேன்" என்றார் அர்ச்சனா.
எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பெரிய படங்கள் குறித்து பேசிய அவர், "எங்களுக்கு கதை தான் முக்கியம். அதுதான் அடிப்படை. அது மக்களிடம் எடுபட வேண்டும். பெரிய படங்கள் எடுக்கும்போது நிறைய அழுத்தங்கள் இருக்கும். ஒரு பெரிய நட்சத்திரம் படத்துக்குள் வரும்போது, அவருக்குக் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். எனவே ரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும். பொதுவான ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். எனவே, ரசிகர்களுக்கு ஏற்றவாறும் கதையம்சத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
அதேசமயம், பெரிய நடிகர்களைக் கொண்டு படம் எடுக்கும்போது கதையும் சற்று வலிமையாக இருக்க வேண்டும். ஆனால், இதன் சமநிலையைக் கண்டறிவது என்பது மிகக் கடினம்" என்றார் அர்ச்சனா.