இலவசமாக விளம்பரம் செய்ய அழைக்க வேண்டாம்: பிரபல நடிகை பதிவு! | Anumol

"விளம்பரம் செய்ய முன்வந்தால், அதில் பலருடைய பங்களிப்பும் உள்ளது."
இலவசமாக விளம்பரம் செய்ய அழைக்க வேண்டாம்: பிரபல நடிகை பதிவு! | Anumol
படம்: https://www.instagram.com/anumolofficial
1 min read

ஹரா, ஒரு நாள் இரவில் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளவர் அனுமோல். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். இன்ஸ்டகிராமில் இவர் பதிவிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது.

சினிமா பிரபலங்கள், சமூக ஊடகப் பிரபலங்கள் உள்ளிட்டோர் பல்வேறு தொழில்களை, செயல்களை, நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபடுவது உண்டு. இதற்காக சம்பந்தப்பட்ட அமைப்புகள் பிரபலங்களை அணுகி விளம்பரம் செய்ய அழைப்பார்கள்.

நடிகை அனுமோலையும் இதுபோல பலர் அணுகியதாகத் தெரிகிறது. ஆனால், அனுமோலை அணுகியவர்களில் பெரும்பாலானோர் ஊதியமே இல்லாமல் வந்து விளம்பரம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், ஊதியம் இல்லாமல் இலவசமாக விளம்பரம் செய்ய தன்னை அழைக்க வேண்டாம் என்பதை அனுமோல் இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

"எப்போதாவது தான் இணைந்து விளம்பரம் செய்வேன். நான் விளம்பரம் செய்தவை பெரும்பாலும் எனக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள் அல்லது நான் அன்றாடப் பயன்படுத்தும் பொருள்களாக இருக்கும். எனக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்றை அல்லது எனக்குத் தொடர்பில்லாத ஒன்றை விளம்பரம் செய்வது என் தொழில்தர்மத்துக்கு சரிவராது என்பதால் அது கடினமே.

மேலும் சிலர் தங்களுடைய உண்மையான பின்கதைகளைக் கூறி உதவி கோருகிறீர்கள். கனவுகளுடன் சிறு தொழில்களைத் தொடங்கியுள்ளார்கள். என்னால் முடிந்தபோது, அந்தத் தொழில் சார்ந்த பொருள்களை என்னால் முடிந்தபோது காசு கொடுத்து வாங்கி என் ஆதரவைத் தெரிவிப்பேன்.

ஆனால், என்னால் ஊதியமே இல்லாமல் விளம்பரம் செய்ய முடியாது. உதவக் கூடாது என்றில்லை. விளம்பரம் செய்ய முன்வந்தால், அதில் பலருடைய பங்களிப்பும் உள்ளது. விளம்பரம் செய்வதற்கான படப்பிடிப்பில் மேக்கப் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஸ்டைலிஸ்ட், பயணம், கேமராவுக்கான வாடகை என எல்லாமுமே அடங்குகிறது. அனைவரும் தங்களுடைய நேரம், உழைப்பு, திறமையைச் செலுத்துகிறார்கள்.

பெரும்பாலானோருக்கு இது பொழுதுபோக்கு அல்ல, வருமானத்துக்கான வழியே இது தான். இலவசமாக விளம்பரம் செய்ய அழைக்கும்போது, தெரியாமலேயே அவர்களையும் நீங்கள் சம்பளம் இல்லாமல் பணிக்கு அழைக்கிறீர்கள். இது சரியல்ல. பொருளாதார ரீதியாக சிரமப்படும்போது, அவர்களுக்குக் குறைந்தபட்சம் சம்பளமாவது கொடுக்க வேண்டும். நாம் செய்யும் வேலைக்கு மதிப்பு கிடைக்க வேண்டும் அல்லவா?

வேறு ஒருவருடைய வெற்றிக்கு இலவசமாக வேலைக்கு அழைப்பதை நிறுத்த வேண்டும். இதை இயல்பாக்க வேண்டும்.

இதைத் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குப் பிடிக்கும். தொடக்கப் புள்ளியிலிருந்து கனவுகளைக் கட்டமைத்து வருபவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால், அனைவரும் ஒன்றிணைந்து நிலையாக கண்ணியத்துடன் வளர வேண்டும். புரிதலுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார் அனுமோல்.

Anumol | Collaborations | Brands

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in