
விசாரணை திரைப்படத்தை தயாரித்த தனுஷ் கதையைக் கேட்காமலேயே பணம் கொடுத்துவிட்டார் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற படங்களால் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். தனது கிராஸ் ரூட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்களையும் தயாரிக்க முயன்ற வெற்றிமாறன், அண்மையில் நடந்த பேட் கேர்ள் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், “தயாரிப்பாளராக இருப்பது அழுத்தத்தைக் கொடுக்கிறது. நான் தயாரித்த மனுஷி படத்திற்குத் தணிக்கை பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றம் வரை சென்று வந்திருக்கிறேன். பேட் கேர்ள் படமும் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. இதெல்லாம் படத்தின் வெளியீட்டைப் பாதிக்கிறது. அதனால் என் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக முடிவெடுத்திருக்கிறேன்” என்று பேசினார்.
இந்நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன், தனுஷ் போன்றதொரு தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார். விசாரணை படத்தை தாம் இயக்கியபோது கதையைக் கேட்காமலேயே தாம் கேட்ட ரூ.2.4 கோடியை தனுஷ் கொடுத்துவிட்டார் என்று கூறியுள்ளார். அதற்குள் படம் எடுத்து முடிக்க வேண்டும் என்பதால் தாமும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷும், நடிகர் கிஷோரும் சம்பளமே வாங்கவில்லை என்றூம் குறிப்பிட்டார். ஆனால் அதன்பின் அந்தத் திரைப்படம் ஆஸ்கர் விருது பெறுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் தனுஷ் ரூ.3.5 கோடியைச் செலவிட்டதாக கூறிய இயக்குநர் வெற்றி மாறன், அந்தப் படம் ரூ.3.85 கோடியை வசூலித்தது என்றும் பேசினார். தனுஷைப் போன்ற தயாரிப்பாளர் கிடைப்பது அரிது என்றும் குறிப்பிட்டார்.