அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர் போலவும், ரஜினி லாஸ்ட் பெஞ்ச் மாணவர் போலவும் இருப்பார்கள் என இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.
‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேட்டையன்’.
இப்படத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - அனிருத்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாக உள்ளது. வேட்டையன் படத்தின் டிரைலர் கடந்த அக். 2 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பான நேர்காணலில் இயக்குநர் ஞானவேல், ரஜினிக்கும் அமிதாப் பச்சனுக்கும் உள்ள வித்தியாசங்களை குறித்து பேசியுள்ளார்.
ஞானவேல் பேசியதாவது
“அமிதாப் பச்சன் ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர், ரஜினி லாஸ்ட் பெஞ்ச் மாணவர். படப்பிடிப்பின்போது அடுத்த நாள் காட்சி குறித்து முந்தைய நாளே அமிதாப் பச்சன் கேட்பார். அந்தக் காட்சியைப் படித்துவிட்டு, அதில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்வார். எனவே, நாளைக்கான படப்பிடிப்புக்கு இன்றே தயாராக இருப்பார்.
ஆனால், ரஜினியிடம் காலையில் நீங்கள் காட்சி குறித்து சொன்னாலும், “ஷாட்ல பாத்துகலாம்” என்று கூறுவார். எனவே அமிதாப் பச்சனிடம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இது குறித்து அவரின் மேலாளரிடம் கேட்டதற்கு, “அனைத்து இயக்குநர்களுக்கும் இதுபோன்ற அனுபவம் உண்டு” என்றார். எனவே, அடுத்த நாள் எடுக்கப்படும் காட்சி குறித்து முந்தைய நாளே அமிதாப் பச்சனிடம் கூறவேண்டும். அடுத்த நாள் மிகவும் தயாரான நிலையில் வருவார். நன்றாக படிக்கும் மாணவர்களுடன் பயணம் செய்வது கடினம்”.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.