படத்தின் நீளத்தைக் குறைத்ததில் சூர்யாவுக்கு உடன்பாடில்லை: ‘மெய்யழகன்’ பிரேம்குமார்

மெய்யழகன் படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டது.
பிரேம்குமார்
பிரேம்குமார்
1 min read

‘மெய்யழகன்’ படத்தின் நீளத்தைக் குறைத்ததில் தன்னை தவிர யாருக்குமே உடன்பாடில்லை என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த் சாமி உள்பட பலர் நடித்த படம் ‘மெய்யழகன்’. சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்தது. இசை - கோவிந்த் வசந்தா. இப்படம் செப்டம்பர் 27 அன்று வெளியானது.

இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக படத்தின் நீளம் மிகவும் அதிகமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இதன் தொடர்ர்சியாக மெய்யழகன் படத்தில் 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடல் தொடரும் என அண்மையில் இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் ‘மெய்யழகன்’ படத்தின் நீளத்தைக் குறைத்ததில் சூர்யாவுக்கு உடன்பாடில்லை என்று இயக்குநர் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பிரேம்குமார் பேசியதாவது

“சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் படத்தின் நீளத்தைக் குறைக்க வேண்டாம் என்றனர். நமது குழந்தையின் மூக்கு, கண், காது சரியில்லை என்று நாமே சொல்லலாமா என்று கேள்வி எழுப்பினார்கள். எனவே, படத்தை எப்படி எடுத்தோமோ அப்படியே இருக்கட்டும் என்றனர்.

அதன் பிறகு படத்தின் நீளத்தைக் குறைத்த பிறகு, நன்றாக இருக்கும் விஷயங்களை ஏன் எடுக்க வேண்டும் என்று சூர்யா கேட்டார். ஆனால், அனைத்து ரசிகர்களின் கருத்துகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நமது படம் யாருக்கெல்லாம் பிடிக்கிறதோ, அவர்கள் மட்டும் நம் ரசிகர்கள் கிடையாது.

எனவே, மனதை திடமாக்கிகொண்டுதான் அந்த முடிவை எடுத்தோம். என்னை தவிர யாருக்குமே அதில் உடன்பாடில்லை. இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், ஆனால் வேறு வழியே இல்லாமல் படத்தின் நீளத்தைக் குறைத்தோம். சூர்யா எனக்கு அண்ணன் போன்றவர், அதனால் அவருக்கு என் மீது கோபம் இல்லை, ஆனால் படத்தின் நீளத்தைக் குறைத்ததில் அவருக்கு உடன்பாடும் இல்லை”.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in