
தனக்கு பேஸ்புக்கில் கணக்கு இல்லை என்றும் அதனால் தனது பெயரில் இயங்கிவரும் கணக்குகளை புறக்கணிக்குமாறும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர், மாஸ்டர், விக்ரம், லியோ என பெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஜி-ஸ்குவாட் எனும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். உறியடி விஜய்குமார் நடிப்பில் உருவான ஃபைட் கிளப் படத்தை தனது புதிய நிறுவனம் மூலமாக வெளியிடுகிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில், பேஸ்புக்கில் லோகேஷ் கனகராஜ் பெயரில் இயங்கி வந்த ஒரு கணக்கில் ஆபாச வீடியோக்கள் பதிவிடப்பட்டன. இதனால் அவருடைய பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக ரசிகர்கள் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுபற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நான் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும் தான் இருக்கிறேன். பிற சமூக ஊடகங்களில் என்னிடம் கணக்கு இல்லை. அதனை நான் பயன்படுத்தவும் கிடையாது. தயவு செய்து போலி கணக்குகளை புறக்கணிக்கவும், பின்தொடரவும் வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.