பாரதிராஜாவுக்குத் தீவிர நுரையீரல் தொற்று: மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை | Bharathiraja |

தொற்று பாதிப்பு காரணமாக ஆர்.கே. செல்வமணி, சீமான், அமீர், லிங்குசாமி, ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் பாரதிராஜாவை நேரில் சந்திக்கவில்லை.
Director Bharathiraja's Health Condition is stable, says Hospital's Medical Bulletin
இயக்குநர் பாரதிராஜா (கோப்புப்படம்)ANI
1 min read

இயக்குநர் பாரதிராஜாவுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் 2025-ல் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்குப் பிறகு, இயக்குநர் பாரதிராஜா உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வந்தது. இதன் தொடர்ச்சியாகவே இயக்குநர் பாரதிராஜாவுக்கு கடந்த டிசம்பர் 27 அன்று உடல்நலம் சரியில்லாமல் போனது. சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பாரதிராஜா உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகளும் பரவி வந்தன. இந்நிலையில் தான் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

"தீவிர நுரையீரல் தொற்று காரணமாக இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. உடல் உறுப்புகள் செயலிழப்பதைத் தடுப்பதற்கான உரிய சிகிச்சைகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களுடைய மருத்துவ நிபுணர்களால் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவார்" என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் ஆர்.கே. செல்வமணி, அமீர், சீனு ராமசாமி, லிங்குசாமி, ஏ.ஆர். முருகதாஸ் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து விசாரித்தார்கள். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உடனிருந்தார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் உடனிருந்தார்.

இயக்குநர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது:

"இயக்குநர் இமயம் பாரதிராஜாவைச் சந்திக்க வந்தோம். கடந்த சில நாள்களாக பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. நாங்கள், மருத்துவரைச் சந்தித்துப் பேசினோம். பாரதிராஜாவின் உடல் உறுப்புகள் எல்லாம் நன்றாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீரான உடல்நிலையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தார்.

இயக்குநர் இமயம் மீது நீங்கள் உண்மையில் அன்பு கொண்டிருந்தால், அவர் உடல்நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள். எந்தச் செய்தியாக இருந்தாலும் குடும்பத்தார் அல்லது மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்தி கொடுக்கப்படும். அதற்கு முன்னதாக நீங்களாக தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம்" என்றார் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி.

Summary

Director Bharathiraja's Health Condition is stable, says Hospital's Medical Bulletin

Bharathiraja | Director Bharathiraja | Bharathiraja Health Update | Bharathiraja Health |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in