

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது வென்ற சசிகுமாருக்கு இயக்குநர் பாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் டிசம்பரில் நடைபெறுவது வழக்கம். இதில் உலகின் பல்வேறு மொழிகளில் வெளியான சிறந்த படங்கள், திரை ஆர்வலர்களுக்காக திரையிடப்பட்டு, அவை குறித்த விவாதங்கள் நடைபெறும். அந்த வகையில், 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, சென்னை பிவிஆர் சினிமாஸில் கடந்த டிசம்பர் 11 முதல் 19 வரை நடைபெற்றது. இந்த விழாவில் ஜெர்மன், ரஷ்யா, ஸ்பெயின், பிரெஞ்ச், தாய்வான் என 51 நாடுகளை சேர்ந்த 122 படங்கள் திரையிடப்பட்டன. மேலும், தமிழில் அலங்கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, வேம்பு, டூரிஸ்டு பேமிலி, பாட்ஷா, 3 பிஹெச்கே ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
சிறந்த நடிகருக்கான விருது
இந்த விழாவில் கடந்த டிசம்பர் 18 அன்று, தமிழ் திரைத்துறையின் பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. குறிப்பாக, அபிஷன் ஜீவிந் இயக்கிய டூரிஸ்டு பேமிலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து விருதுடன் கூடிய படத்தைச் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்து, சசிகுமார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சிறந்த படத்திற்கான இரண்டாவது பரிசையும் டூரிஸ்ட் பேமிலி பெற்றிருந்தது.
பாலாவின் பாராட்டு
இந்நிலையில், சிறந்த நடிகருக்கான விருது வென்றதற்காக சசிகுமாரைப் பாராட்டி இயக்குநர் பாலா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். சேது உள்ளிட்ட பாலாவின் ஆரம்பகால படங்களில் சசிகுமார் அவரது உதவி இயக்குநராக இருந்துள்ளார். அந்த முறையில் பாலா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
”பேரன்பு சசி, சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு நீ சிறந்த நடிகனாக விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் மன வெளிப்பாடுதான் இக்கடிதம். கடந்த இருபத்தைந்து வருடங்களாக உன்னைப் பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன், பேராற்றல் கொண்டவன். கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை, அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்துப் பூரித்துப் போகிறேன். உன் இயல்பான எளிமைக்கிருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை. இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் ’சம்பவக்காரன்’ சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று எழுதியுள்ளார்.
சசிகுமாரின் பதில்
பாலா எழுதியுள்ள கடிதத்தைத் தனது சமூக ஊடகத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சசிகுமார். அவர் தனது பதிவில், “தேசிய (விருது) அங்கிகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி.. உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Director Bala has congratulated actor Sasikumar for winning the Best Actor award at the Chennai International Film Festival.