
தயாரிப்பாளர் சங்கத்தால் தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு திரும்ப பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒரு சில தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது.
இதில், நடிகர் தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில், இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய படங்களின் பணிகளை துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தனுஷுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்ட் கொடுத்தது.
இந்நிலையில் முன்பணம் பெறப்பட்ட இரண்டு தயாரிப்பாளர்களில் ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாகவும் மற்றொரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் தனுஷ் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தனுஷுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.