

ப்ரோ கோட் பெயரைப் பயன்படுத்த ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரவி மோகன் நடித்து தயாரித்து வரும் படத்தின் பெயர் ப்ரோ கோட். கார்த்திக் யோகி இப்படத்தை இயக்கி வருகிறார். ஆனால், இதே 'ப்ரோ கோட்' என்ற பெயரில் மதுபானத்தைத் தயாரித்து வருகிறது இண்டோஸ்பிரிட் பெவரேஜஸ் நிறுவனம்.
ப்ரோ கோட் என்ற பெயரை ரவி மோகனின் படத்துக்குப் பயன்படுத்துவதை எதிர்த்து இந்த நிறுவனம் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. 'ப்ரோ கோட்' என்ற பெயரில் 2015 முதல் மதுபானத்தைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்றும் நுகர்வோர் மத்தியில் பெருமளவில் நம்பிக்கை ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, இதே பெயரை திரைப்படத்துக்குப் பயன்படுத்துவது டிரேட்மார்க் விதிமீறல், தங்களுடைய பெயருக்குச் சேதத்தை ஏற்படுத்தும் என்பது நிறுவனம் முன்வைக்கும் வாதம்.
இதை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா, ஒரே டிரேட்மார்க் இருவேறு துறைகளில் பயன்படுத்தப்படும்போது, நுகர்வோரிடையே அது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 23 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, இதே ப்ரோ கோட் பெயர் பிரச்னையில் சென்னை உயர் நீதிமன்றம் ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. தற்போது, தில்லி உயர் நீதிமன்றம் ரவி மோகன் ஸ்டூடியோஸுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியது பேசுபொருளாகியுள்ளது.
The Delhi High Court has issued an interim stay restraining Ravi Mohan Studios from using the title ‘Bro Code’, following a dispute over the ownership and rights of the name.
Ravi Mohan | Ravi Mohan Studios | Bro Code | Delhi High Court |