

பொன்னியின் செல்வம் படத்தில் இடம்பெற்ற வீரா ராஜ வீரா பாடல் விவகாரத்தில் ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவை ரத்து செய்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வம் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்படத்தின் 2-ம் பாகத்தில் வீரா ராஜ வீரா என்ற பாடல் வெளியானது.
இதையடுத்து, அப்பாடல் தன் அப்பா மற்றும் மாமா இசையமைத்த சிவஸ்துதி பாடலில் இருந்து திருடப்பட்டதாக, பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் உஸ்தாத் ஃபயாஸ் வாசிஃபுதீன் டாகர் என்பவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் கடந்த 2023 வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் தனி நீதிபதி, இப்பாடல் சிவஸ்துதி பாடலை ஒத்து இருப்பதாகத் தோன்றுவதால், ஏ.ஆர். ரஹ்மான் நீதிமன்ற பதிவாளரிடம் ரூ. 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்றும், அதிலிருந்து ரூ. 2 லட்சத்தை பாடகர் ஃபயாஸுக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, இன்று இரு நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏ.ஆர். ரஹ்மான் தரப்பில், ’வீரா ராஜா வீரா’ பாடலானது ‘சிவ ஸ்துதி’ பாடலை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று வாதிடப்பட்டது. அதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னதாக ஏ.ஆர். ரஹ்மான் அபராதம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து அறிவித்தனர். ஆனாலும், இரு பாடல்களின் காப்புரிமை விவகாரம் குறித்து இன்னும் ஆராயவில்லை என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.