கல்கி 2898 ஏடி பாகம் 2-ல் தீபிகா படுகோன் இல்லை: தயாரிப்பு நிறுவனம் | Kalki 2898 AD | Deepika Padukone |
கல்கி 2898 ஏடி படத்தில் இருந்து கதாநாயகி தீபிகா படுகோனே விலகுவதாக அப்படத்தைத் தயாரிக்கும் வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன், ஷோபனா உள்ளிட்ட பலரும் நடித்த படம் கல்கி 2898. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்திருந்தார். இதன் அடுத்த பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் 2-ம் பாகத்தில் இருந்து விலகியுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், “தீபிகா படுகோன் கல்கி 2898 ஏடி படத்தின் அடுத்த பாகத்தில் இல்லை என்பதைத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது. கவனமான பரிசீலனைகளுக்குப் பிறகு நாங்கள் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துள்ளோம். முதல் பாகத்தை உருவாக்கும்போது அவருடன் பயணித்த நீண்ட அனுபவம் உள்ள போதிலும் அவருடனான கூட்டணியைத் தொடர முடியவில்லை. மேலும், கல்கி 2898 ஏடி போன்றதொரு படம் பலவிதமான அர்ப்பணிப்புகளைத் தகுதியாகக் கொண்டது ஆகும். அவரது எதிர்கால படைப்புகளுக்கு எங்களது வாழ்த்துகள்” என்று கூறப்பட்டுள்ளது.