
இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சஹார் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொகுப்பாளர் சல்மான் கானுடன் உரையாடும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இதன்மூலம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் தீபக் சஹார் போட்டியாளராக நுழைகிறாரா என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.
ஹிந்தி பிக் பாஸ் 19 கடந்த ஆகஸ்ட் 24 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில், முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக ஷெபாஸ் என்பவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றார். இந்த நிலையில் தான் தீபக் சஹார் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளராக தீபக் சஹார் பங்கேற்கிறாரா என்ற சந்தேகங்களும் எழுந்தன. சல்மான் கானிடம் உரையாடும்போது தீபக் சஹார் கூறுகையில், "கிரிக்கெட்டைவிட பிக் பாஸ் கடினமானது. காரணம், இந்த வீட்டில் உங்களுடைய எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியவே தெரியாது" என்றார். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறித்து கேட்டபோது, "முதலில் நான் வீட்டுக்குள் செல்கிறேன். எல்லாவற்றையும் கண்காணித்துவிட்டு, பிறகு தான் முடிவு செய்ய முடியும். எனினும், வெற்றிக்கான வாய்ப்பு மிக அதிகம்" என்றார் தீபக் சஹார்.
ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டதற்குக் காரணம் அவர் போட்டியாளர் அல்ல என்பது பின்னர் தெரியவந்தது. தீபக் சஹாரின் சகோதரி மாலதி சஹார் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது வைல்ட் கார்ட் போட்டியாளராகப் பங்கேற்றார். இதன் காரணமாகவே, சகோதரி மாலதி சஹாருக்கு ஆதரவாக தீபக் சஹார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்.
தீபக் சஹாரின் சகோதரி மாலதி சஹார் நடிப்பு, மாடலிங், திரைக் கலைஞர் எனப் பன்முகத் திறன் கொண்ட பிரபலம். ஜூனியஸ் எனும் படத்தின் நடிகையாக அறிமுகமாகி திரைப்படங்களில் நடித்துள்ளார். குறும்படங்களை இயக்கி தயாரித்துள்ளார். இன்ஸ்டகிராம் பக்கத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மாலதியைப் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
Deepak Chahar | Malti Chahar | Bigg Boss | Bigg Boss 19 | Hindi Bigg Boss | Salman Khan |