ஹிந்தியில் புதுமுகங்கள் நடிப்பில் நேற்று (ஜூலை 18) வெளியான படம் சையாரா. அனுபவமிக்க இயக்குநர் மோஹித் சுரி இயக்கிய படம் இது. இவர் ஏக் வில்லன், மலங், ஆஷிகி 2 உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.
இவருடைய இயக்கத்தில் அஹான் பாண்டே, அனீத் பட்டா ஆகிய புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி ஹிந்தி திரையுலக்கைக் கலக்கியுள்ளது காதல் படமான சையாரா. இந்தப் படம் வெளியான முதல் நாளில் ரூ. 21.25 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளது.
இந்தியாவிலேயே புதுமுகங்கள் நடித்து முதல் நாளில் அதிக நிகர வசூலைப் பெற்ற படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது சையாரா. நடிகர்களின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு என விமர்சகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படக் காட்சிகள் மற்றும் பாடல்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்கள் படத்தைக் கொண்டாடித் தீர்த்து வருவதை சமூக ஊடகங்களில் காண முடிகிறது.
சையாராவைத் தயாரித்துள்ளது யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம். கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, இந்த நிறுவனம் தயாரித்த படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த பட வரிசையில் பதான் மற்றும் டைகர் 3-க்கு அடுத்த இடத்தில் சையாரா இடம்பிடித்துள்ளது.
ஷாருக் கானின் பதான் முதல் நாளில் 55 கோடியையும் டைகர் 3 முதல் நாளில் 43 கோடியையும் வசூலித்துள்ளன. ரூ. 21.25 கோடியுடன் சையாரா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இந்நிறுவனம் தயாரித்த மற்ற 4 படங்கள் எதுவும் முதல் நாளில் 11 கோடியைக் கூட தொட்டதில்லை என்று விமர்சகர் தரன் ஆதார்ஷ் எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Saiyaara | Mohit Suri | Bollywood | YSRFilms | Yash Raj Films | Ahaan Panday | AneetPadda