

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்க தாமதம் செய்வது ஏன் என்று தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் விஜயை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜனவரி 9 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜயின் கடைசிப் படம்
தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம் தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜயின் கடைசிப் படம் இது என்று கூறப்படுகிறது. இதனால், படத்துக்கு திரைத்துறையைக் கடந்து அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6.45 மணிக்கு தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும் படத்தின் முன்பதிவு நாளை (ஜன 4) தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
தணிக்கை சான்றிதழ் பிரச்னை
இந்நிலையில் படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, கடந்த மாதம் தணிக்கைக்கு குழுவுக்குப் படம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19 அன்று படத்தை பார்த்த தணிக்கைக்குழு சில காட்சிகளை நீக்கக் கூறியதாகவும், அதன்படி காட்சிகளை நீக்கி படக்குழு மறு தணிக்கைக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9 அன்று வெளியாகவுள்ள நிலையில் இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிடிஆர் நிர்மல் குமார் கேள்வி
இதையடுத்து ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதை யார் தடுக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பி தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து யுஏ சான்றிதழை பரிந்துரைத்தனர். ஆயினும் தற்போது வரை சென்சார் சான்றிதழ் தரப்படவில்லை. தடுப்பது யாரோ? தடைகள் பல வரலாம். தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம், அனைத்து தடைகளை தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.
Why is there a delay in providing the censor certificate Vijay's Jananayagan? questioned TVK Joint General Secretary CTR Nirmal Kumar