
‘புஷ்பா 2’ தயாரிப்பாளர் குறித்து தேவி ஸ்ரீ பிரசாத் பேசியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.
‘புஷ்பா 2’ படத்தின் புரமோஷன் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத், “ரவி சார். நான் பாடலையோ பின்னணி இசையையோ சரியான நேரத்தில் கொடுக்கவில்லை என்று குறை கூறுகிறீர்கள். உங்களுக்கு என் மீது அதிகமான அன்பு இருக்கிறது என்று எனக்குத் தெரியும், ஆனால் அன்பு இருக்கும் இடத்தில்தான் புகார்களும் இருக்கும். இருப்பினும், அன்பை விட என் மீது உங்களுக்கு அதிகமான புகார்கள் இருப்பது போல் தெரிகிறது.
இந்த நிகழ்ச்சிக்கும் தாமதமாக வந்ததாக சொல்கிறீர்கள். நான் என்ன செய்வது? நான் 25 நிமிடங்களுக்கு முன்பே இங்கு வந்தேன், ஆனால் நான் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்று கூறியதால் தாமாதமானது. அது எனது தவறில்லை” என்று புஷ்பா 2 படத்தின் தயாரிப்பாளரை குறிப்பிட்டு பேசினார்.
முன்னதாக, புஷ்பா 2 படத்தின் பின்னணி இசைப் பொறுப்பில் இருந்து தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக தமன், சாம் சி.எஸ் போன்றோர் பணியாற்றி வருவதாகவும் தகவல் வெளியானது.
மேலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்தும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இவ்வாறு பேசியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.