பிக் பாஸ் நிகழ்ச்சியால் விஜய் சேதுபதிக்கு வந்த சிக்கல்: சிவகங்கையில் புகார்

"இழிவுபடுத்தி பேசியதற்கு அவர்கள் நிகழ்ச்சியிலேயே பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்."
கோப்புப்படம்
கோப்புப்படம்ANI
1 min read

ஆத்தங்குடி டைல்ஸ் விளம்பரம் தொடர்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வருகிறார். நிகழ்ச்சியின் ஊடாகவே விளம்பரம் செய்யப்படுவது நிகழ்ச்சியின் இயல்பான ஒன்று. விளம்பரங்களும் நிகழ்ச்சியின் ஓர் அங்கம்.

அண்மையில் கேஏஜி டைல்ஸ் நிறுவனம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ததாகத் தெரிகிறது. இதில், ஆத்தங்குடி டைல்ஸ் குறித்து இழிவாகப் பேசியதாக ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சிவகங்கை மாவட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் என்கிற முறையில் விஜய் சேதுபதி மீதும் இவர்கள் புகாரளித்துள்ளார்கள்.

ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் கூறியதாவது:

"நாங்கள் ஆத்தங்குடி டைல்ஸ் தயாரிப்பாளர்கள். ஆத்தங்குடி பகுதி என்பது சிவகங்கை மாவட்டத்தில் சிறப்புமிக்க பகுதி. காரணம், இதுவொரு பாரம்பரியமான கல். இங்குள்ள மண்ணிலிருந்து செய்யக்கூடிய டைல்ஸ், ஆத்தங்குடி டைல்ஸ்.

இந்த டைல்ஸுக்கு நிறைய பேரும் புகழும் கிடைத்துவிட்டது. எங்களுடைய ஆத்தங்குடி பெயரைக் கெடுக்கும் அளவுக்கு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேஏஜி டைல்ஸ் என்கிற விளம்பரதாரர், ஆத்தங்குடி டைல்ஸை இழிவுபடுத்தியுள்ளார். இது கைகளால் தயாரிக்கப்படுகிற கல், சரியான அளவில் இருக்காது, நிறம் வெளுத்துவிடும், கறை படியும், என்றெல்லாம் இழிவுபடுத்தியுள்ளார்.

ஆத்தங்குடியிலுள்ள அனைத்து டிசைன்களையும் அவருடைய டைல்ஸில் பயன்படுத்தி, எங்களுடைய டைல்ஸை தாழ்த்தி அவருடைய டைல்ஸை முக்கியத்துவப்படுத்தி பேசுகிறார்கள். நாங்கள் இதை ஒரு குடிசைத் தொழிலைப்போல செய்து வருகிறோம். இதை நம்பி 1,000 குடும்பங்கள் உள்ளன. எங்களுடைய டைல்ஸை தாழ்த்தி, அவருடைய டைல்ஸை மிகவும் உயர்வாகப் பேசி, விலையையும் குறைத்து சந்தைப்படுத்துகிறார்.

இதற்கு விஜய் டிவி நிர்வாகமும் அதைத் தொகுத்து வழங்குபவரும் உதவி செய்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டித்து துணை கண்காணிப்பாளரிடம் மனு கொடுத்துள்ளோம். அரசு இதை உடனடியாகச் செயல்படுத்தி, எங்களுக்கு முடிவு சொல்ல வேண்டும்.

அல்லது, நாங்கள் அனைவரும் ஒன்று கூடி தொழிலாளர்களோடு இணைந்து உற்பத்தியாளர்களும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எங்களை இவ்வளவு தூரம் இழிவுபடுத்தி பேசியதற்கு அவர்கள் நிகழ்ச்சியிலேயே பகிரங்கமாக எங்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இதற்காக மனு கொடுத்துள்ளோம். அரசு உடனடியாக செவிசாய்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in