சாதனை படைக்கப்போகும் இளையராஜா: நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

சாதனை படைக்கப்போகும் இளையராஜா: நேரில் வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்.
Published on

ஆசியாவைச் சேர்ந்த முதல் நபராக சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கும் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

‘வேலியன்ட்’ (Valiant) என்னும் தலைப்பில் இசைஞானி இளையராஜா இயற்றி இருக்கும் சிம்பொனி வரும் மார்ச் 8-ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நேரடி இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றப்பட உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல், ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சிம்பொனி இயற்றியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், சென்னையில் இன்று (மார்ச் 2) இளையராஜாவை நேரில் சந்தித்து, அவரது சிம்பொனி இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த சந்திப்பு தொடர்பாக தன் எக்ஸ் கணக்கில் வெளிட்ட பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது,

`இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது: ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று லண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய இளையராஜா.

தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று (மார்ச்.2) நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய `வேலியன்ட் சிம்பொனி’ (Valiant symphony) இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.

உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜாவின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்’ என்றார்.

logo
Kizhakku News
kizhakkunews.in