
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடன இயக்குநர் ஜானிக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர் சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின்போது, ஜானி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார்.
நர்சிங்கியிலுள்ள தனது இல்லத்திலும் வைத்து பல முறை பாலியல் கொடுமை செய்ததாக அவர் புகாரளித்தார்.
இவருடையப் புகாரின்பேரில் ராய்துர்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது கூடுதல் விசாரணைக்காக நர்சிங்கி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார். மேலும், தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக நடன இயக்குநர் ஜானி பெங்களூரு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமின் வழங்கப்பட்டுள்ள நாட்களில் ஊடகங்களில் பேட்டி அளிக்கக்கூடாது, தலா 2 லட்சத்துக்கு இரண்டு பிணை உத்தரவாதங்களை தாக்கல் செய்யவேண்டும், இந்த காலகட்டத்தில் மற்றொரு இடைக்கால ஜாமின் மனு தாக்கல் செய்யக்கூடாது போன்ற நிபந்தனைகளுடன் ஜானிக்கு ரங்கா ரெட்டி மாவட்ட நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.
தேசிய விருது விழாவில் பங்கேற்பதற்காக அவருக்கு அக்டோபர் 6 முதல் 10 வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 10 அன்று காலை 10 மணிக்கு முன்பாக ஜானி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானிக்கு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.