பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த நடனப் பெண் ஒருவர், சென்னை, மும்பை மற்றும் ஹைதராபாத் என வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்புகளின்போது, ஜானி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.
நர்சிங்கியிலுள்ள தனது இல்லத்திலும் வைத்து பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் புகாரளித்தார்.
இவருடையப் புகாரின்பேரில் ராய்துர்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கானது கூடுதல் விசாரணைக்காக நர்சிங்கி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜனசேனா கட்சியிலிருந்து ஜானி நீக்கப்பட்டார். மேலும், தெலங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் துன்புறுத்தல், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பெங்களூரு காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் வழங்க கோரி ஜானி தாக்கல் செய்த மனு நேற்று (அக்.24) தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி ஜானி மாஸ்டருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜாராக வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது உள்பட சில நிபந்தனைகளும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக ஜானிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு, அதன் பிறகு அது நிறுத்தி வைக்கப்பட்டது.