பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஒவ்வொருவரும் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்று பிரபல பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
2017-ல் வெளியான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன் சாமிநாதன். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யப், பாரதிராஜா, நட்டி நட்ராஜ், மம்தா மோகன் தாஸ், அபிராமி, சிங்கம்புலி உட்பட பலரும் நடித்த படம் ‘மகாராஜா’.
இப்படம் பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டதில் இருந்தே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் மகாராஜா படத்தைப் நான் பார்க்க மாட்டேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் தளத்தில் சின்மயி தெரிவித்துள்ளதாவது:
“பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் தொல்லை பற்றி பேசும் படமாக அமைந்துள்ள மகாராஜா படத்தில் வைரமுத்து தான் பாடல் வரிகளை எழுதியுள்ளார் என்பதை அறிந்தவுடன் வருத்தப்பட்டேன். உலகத்திலேயே தமிழ் திரையுலகம் மட்டும் தான் தங்களுக்கு பிடித்த ஒருவரை குற்றம்சாட்டியதற்காக, குற்றம்சாட்டியவரை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது. எனவே நான் அந்த படத்தை பார்க்க விரும்பவில்லை. அந்த படத்தை பார்த்துவிட்டு தனது கருத்தைக் கூறியதற்காக பத்திரிக்கையாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டார் என கேள்விப்பட்டேன். தமிழ் திரையுலகில் சக்தி வாய்ந்தவர்கள் சரியானதை செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன், ஆனால் ஒவ்வொரு முறையும் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கும் ஒவ்வொருவரும் அதற்கான பலனை அனுபவிப்பார்கள்” என்றார்.