புஷ்பா 2 வெளியீடு: கூட்டநெரிசலில் காயமடைந்த சிறுவன் மூளைச் சாவு

சட்ட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சென்று சந்திக்க வேண்டாம் என தான் அறிவுறுத்தப்பட்டதாக அல்லு அர்ஜுன் கூறினார்.
புஷ்பா 2 வெளியீடு: கூட்டநெரிசலில் காயமடைந்த சிறுவன் மூளைச் சாவு
ANI
1 min read

புஷ்பா 2 வெளியீட்டின்போது அல்லு அர்ஜுன் வந்த ஹைதராபாத் திரையரங்கில் கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாகக் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா 2 வெளியீட்டின்போது ஹைதராபாதிலுள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4 அன்று சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்க்க அல்லு அர்ஜுன் திரையரங்குக்குச் சென்றிருந்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி படம் பார்க்க வந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். இவருடைய மகன் சாய் தேஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரிழந்த ரேவதியின் கணவர் பாஸ்கர் அளித்த புகாரின் பேரில் அல்லு அர்ஜுன் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். இவருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.

அதற்குள் அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் குழு, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் அவருக்கு இடைக்காலப் பிணையைப் பெற்றுவிட்டார்கள். தெலங்கானா உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவைப் பிறப்பித்தாலும், சனிக்கிழமை காலை தான் அல்லு அர்ஜுன் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தெலங்கானா காவல் துறை முடிவு செய்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது.

இதனிடையே, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டபோது செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர், "என்னுடைய மகன் படம் பார்க்க விரும்பினான். அதற்காக சந்தியா திரையரங்குக்கு குடும்பத்தினரை அழைத்துச் சென்றேன். அல்லு அர்ஜுன் அங்கு வந்திருந்தார். ஆனால், அது அவருடையத் தவறு அல்ல" என்று கூறினார்.

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், சட்ட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பதால், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சென்று சந்திக்க வேண்டாம் என தான் அறிவுறுத்தப்பட்டதாக அல்லு அர்ஜுன் கூறினார்.

மூளைப் பகுதியில் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாக ஹைதராபாத் ஆணையர் சிவி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in