
ரூ. 60 கோடி மோசடி வழக்கு குறித்து விளக்கமளித்துள்ள ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா, தாங்கள் எந்தத் தவறும் செயவில்லை எனக் கூறியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி மற்றும் அவருடைய கணவர் ராஜ் குந்த்ரா மீது தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் மோசடிக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். 2015 மற்றும் 2023 காலகட்டத்தில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா ரூ. 60 கோடியைப் பெற்றதாக தீபக் கோதாரி தெரிவித்துள்ளார். தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி தனிப்பட்ட செலவுகளுக்கு இதைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தியா டுடேவிடம் பிரத்யேகமாகப் பேசிய ராஜ் குந்த்ரா இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
"பொறுத்திருந்து பாருங்கள். அது தான் வாழ்க்கை. நாங்கள் அதுதொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை. காரணம், நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியும். உண்மை நிச்சயமாக வெளியில் வரும். நாங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் தவறு செய்ததில்லை, தவறு செய்யவும் மாட்டோம்" என்றார் ராஜ் குந்த்ரா. வழக்கின் பின்னணி குறித்து ராஜ் குந்த்ரா எதையும் விரிவாகப் பேசவில்லை.
வழக்கு பின்னணியைப் பொறுத்தவரை ரூ. 60 கோடியை இரு தவணைகளாக ஏப்ரல் 2015-ல் ரூ. 31.95 கோடியும் செப்டம்பர் 2015-ல் ரூ. 28.53 கோடியும் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பணத்தைத் திருப்பிக் கொடுப்பது குறித்து கடந்த ஏப்ரல் 2016-ல் ஷில்பா ஷெட்டி எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் 12% ஆண்டு வட்டியுடன் பணம் திருப்பி கொடுக்கப்படும் என தீபக் கோதாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் சில மாதங்களிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஷில்பா ஷெட்டி விலகியிருக்கிறார். மேலும், ரூ. 1.28 மதிப்புடைய தீர்க்கப்படாத வழக்கு ஒன்று நிறுவனத்தின் மீது இருந்தது தெரியவந்திருக்கிறது என்று அதுகுறித்து முன்கூட்டியே தன்னிடம் தெரிவிக்கவில்லை என்றும் தீபக் கோதாரி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றங்களுக்கானப் பிரிவு சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
Shilpa Shetty | Raj Kundra | Mumbai Police | Cheating Case |