
ஜானகி என்ற பெயர் காரணமாக தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக படத் தயாரிப்பாளர் கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
மலையாளத்தில் பிரவீன் நாராயணன் இயக்கியுள்ள 'ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா' படத்தில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன், ஸ்ருதி ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
காரணம், கதாபாத்திரத்தின் பெயர். படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் அனுபமா பரமேஸ்வரனின் கதாபாத்திரப் பெயர் ஜானகி. இப்பெயர் சீதையைக் குறிக்கிறது. கடவுளைக் குறிக்கும் பெயரை படத்துக்கும் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்துக்கும் வைக்கக் கூடாது என்பது தணிக்கை வாரியத்தின் அறிவுறுத்தல் என்று படக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இப்படம் ஜூன் 27 அன்று வெளியாகவுள்ள நிலையில், இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
இப்படத்துக்கு திருவனந்தபுரத்தில் உள்ள தணிக்கை வாரியத்தின் பிராந்திய அலுவலகத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. மும்பையிலுள்ள தணிக்கை வாரியத்தின் தலைமையகத்தில் தான் அலுவலர்கள் படப் பெயர் மற்றும் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றச் சொன்னதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமல் இருப்பதை எதிர்த்து படத்தைத் தயாரித்துள்ள காஸ்மோஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் செவ்வாய்க்கிழமை கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
லைவ் லாவில் வெளியான செய்தியின்படி மனுதாரர் தனது மனுவில், "தணிக்கை சான்றிதழைப் பெறுவதற்காக இ-சினிமாபிரமான் தளத்தின் வழியாக ஜூன் 12 அன்று படம் சமர்ப்பிக்கப்பட்டது. தணிக்கைக்காக படம் ஜூன் 18 அன்று திரையிடப்பட்டது. இப்படம் குறித்து தணிக்கை வாரியம் சார்பில் இதுவரை அதிகாரபூர்வமாக ஆட்சேபனை எதுவும் எழுப்பப்படவில்லை. ஆனால், ஜானகி என்ற பெயரை மாற்றச் சொல்லி தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது என்பதை நாளிதழ்களில் வெளியான தகவல்களின் மூலம் தெரிந்துகொண்டோம். முன்பு படத்தின் டிரெய்லருக்கு தணிக்கை வாரியம் எந்தக் கோரிக்கையையும் வைக்காமல் தணிக்கை சான்றிதழ் வழங்கியது. ஆனால், படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்துவது நிதி இழப்பை ஏற்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் உள்ளது" என்று தயாரிப்பாளர் சார்பில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு மீது பதிலளித்துள்ள தணிக்கை வாரியம், கூடுதல் ஆய்வுக்காக இப்படம் மறுஆய்வுக் குழுவின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மறுஆய்வுக் குழு ஜூன் 26 அன்று கூடவுள்ளதாகவும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. மறு ஆய்வுக் குழுவின் முடிவை ஜூன் 27 அன்று உடனடியாக நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும் என கேரள உயர் நீதிமன்ற நீதிபதி என். நாகரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.