பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு!

கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனோ
மனோ
1 min read

மது போதையில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோ மகன்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவர் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் என்ற 16 வயதான ஐடிஐ மாணவருடன் வளசரவாக்கத்தில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு பயிற்சி முடிந்தப் பிறகு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் கிருபாகரன் மற்றும் நிதிஷ் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், தாக்குதல் நடத்திய கும்பல் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதில் கிருபாகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கிருபாகரன் மற்றும் நிதிஷ் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வளசரவாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து விபரங்களை சேகரித்தனர்.

இது தொடர்பான விசாரணையில், தாக்குதல் நடத்தியது பாடகர் மனோவின் இரு மகன்கள் உட்பட 5 பேர் என்பது தெரிய வந்துள்ளது. எனவே, மனோ மகன்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மனோ மகன்கள் இருவரும் தலைமறைவாக இருப்பதாகவும், காவல் துறையினர் அவர்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in