நடிகை பார்வதி நாயர் மீது தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2022-ல் தனது வீட்டில் வேலை செய்த சுபாஷ் என்பவர், ரூ. 10 லட்சம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன்களை திருடிச் சென்றதாக பார்வதி நாயர் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நுங்கம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சுபாஷ் தன்னை தாக்கியதாகக் கூறி பார்வதி உள்பட 7 பேர் மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பிறகு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து பார்வதி உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.