கோட் திரைப்படத்தில் கேப்டன் வருகிற காட்சி மிக பிரம்மாண்டமாக வந்திருக்கிறது என்று விஜய் தன்னிடம் மகிழ்ச்சியாகக் கூறியதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
இது தொடர்பாக பிரேமலதா அளித்த பேட்டி பின்வருமாறு:
`விஜய் எங்களுக்குப் புதிய நபர் இல்லை. உங்களுக்கெல்லாம் இது புதிதாகத் தெரிகிறதா என்று தெரியாது. எங்கள் வீட்டுக்கு அருகே சாலிக்கிராமத்தில்தான் பல ஆண்டுகாலம் இருந்தார். கேப்டனுக்கும் எஸ்.ஏ. சந்திரசேகர் சார் அவர்களுக்கும் உள்ள நட்பு என்ன என்பது இந்த உலகத்துக்குத் தெரியும். எனவே விஜய் எங்கள் வீட்டுக்கு வருவது புதிது இல்லை. எத்தனையோ முறை வந்துள்ளார்.
விஜய் எப்போதும் எங்கள் வீட்டுக்கு வருவதைப் போல, எங்கள் வீட்டுப் பிள்ளை மாதிரித்தான் அன்றைக்கு வந்தார். விஜய பிரபாகரன், சண்முக பாண்டியனுடன் மனம் வீட்டு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் என்னுடைய இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் சினிமா உலகில் நீங்கள்தான் எங்கள் முன்னுதாரணம் அண்ணா என்று கூறினார். அப்போது அவர் விஜய பிரபாகரனைப் பார்த்து நீதான் அரசியலில் எனக்கு சீனியர், சிறப்பாகப் பேசுகிறாய், செய்தியாளர்களை சிறப்பாக கையாளுகிறாய் உனக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்றார்.
அன்றைக்கு அவர்களுக்கு இடையே நல்ல கலந்துரையாடல் இருந்தது. அவருடன் தயாரிப்பாளர் அர்ச்சனாவும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் வந்திருந்தனர். வெங்கட் பிரபுவையும் எனக்கு சிறுவயதில் இருந்து தெரியும் எனவே அது குடும்ப சந்திப்பு போலத்தான் இருந்தது.
கோட் திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் கேப்டன் வருவதை முதலில் இருந்தே வெங்கட்பிரபு கூறிவந்தார். எனவே முறைப்படி வந்து நீங்கள் எங்களுக்குக் கொடுத்தது மிகப்பெரிய பாக்கியம் என்று அதற்கான நன்றியைத் தெரிவித்தனர்.
படம் வெளியானதும் நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்றார். நிச்சயமாக நாங்கள் வருவோம் என்றேன். கோட் திரைப்படத்தில் கேப்டன் வருகிற காட்சி மிக பிரம்மாண்டமா வந்திருக்கிறது என்று மிக மகிழ்ச்சியாகக் கூறினார். விஜய்க்கு நான் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்’.