
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் தீபக் கோதாரியிடமிருந்து 2015 மற்றும் 2023 காலகட்டத்தில் ரூ. 60 கோடியைக் கடனாகப் பெற்றுக்கொண்டு, பிறகு அதை முதலீடாக மாற்றியதாக ராஜ் குந்த்ரா மற்றும் அவரது மனைவி ஷில்பா ஷெட்டி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரூ. 60 கோடியைத் திருப்பி செலுத்தவில்லை என இருவர் மீதும் மோசடி வழக்கு உள்ளது. இதுதொடர்பாக ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி எதிராக மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மும்பை காவல் துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ள லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக்கோரி இருவரும் மும்பை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்கள். லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்தால் மட்டுமே தங்களால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியும் என்று இருவரது தரப்பிலும் வாதிடப்பட்டது.
விசாரணைக்கு ஒத்துழைப்பதால் மட்டுமே இருவரும் கைது செய்யப்படாமல் இருப்பதாக மும்பை உயர் நீதிமன்றம் கருதியது. முழுமையான தொகையான ரூ. 60 கோடியைச் செலுத்தினால் மட்டுமே தங்களுடைய மனு மீது பரிசீலனை செய்ய முடியும் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்த வழக்கு அக்டோபர் 14 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, மும்பை காவல் துறையினர் பொருளாதாரக் குற்றப்பிரிவினர் ராஜ் குந்த்ராவிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். விசாரணையின்போது, பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும் அதன் காரணமாகவே தன்னால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும் ராஜ் குந்த்ரா தெரிவித்ததாகத் தகவல் வெளியானது. நிதிச் சிக்கல் காரணமாகவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என ராஜ் குந்த்ரா கூறியிருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜ் குந்த்ராவிடம் காவல் துறையினர் இருமுறை விசாரணை நடத்தியுள்ளார்கள். அடுத்தடுத்து வாரங்களின் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 4 அன்று ஷில்பா ஷெட்டியிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கணவருடன் இணைந்து தொடங்கிய நிறுவனத்தில் நிர்வாகச் செயல்பாடுகள் எதிலும் தான் தலையிட்டதில்லை என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்திருக்கிறார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு 2016-ல் அமல்படுத்தியது.
Raj Kundra | Shilpa Shetty | Fraud Case |