பிக் பாஸ் 8: முத்துக்குமரன் வென்றதும் செளந்தர்யா தோற்றதும் எதனால்? விஜய் சேதுபதி மீண்டும் வரலாமா?

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை வென்ற முத்துக்குமரன்
பிக் பாஸ் 8 நிகழ்ச்சியை வென்ற முத்துக்குமரன்
8 min read

பிக்பாஸின் வழக்கமான முகமான கமல் ஹாசன் இல்லாமல் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்தப் போகிறார் என்கிற அறிவிப்பு.

போட்டியாளர்களில் ஏராளமான தொலைக்காட்சிப் பிரபலங்கள், பேச்சாளர்கள், நடிகர்கள்.

தீபக், அன்ஷிதா, பவித்ரா, விஷால், அருண், ஜாக்குலின், அர்ணவ், ரஞ்சித், தர்ஷா, சுனிதா என விஜய் டிவியில் புகழ்பெற்ற தொடர்கள், நிகழ்ச்சிகளில் பலகாலமாக மக்களுக்கு அறிமுகமானவர்கள் - பெரும்பாலும் கதாநாயகன், கதாநாயகிகள்.

தர்ஷிகா, ரயான், சத்யா போன்ற சீரியல் நடிகர்களும் முத்து, மஞ்சரி போன்ற தமிழ்ப் பேச்சு நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள். படங்களில் தலைகாட்டிய சாச்சனா, சிவக்குமார், ஆனந்தி.

இப்படி முகம் தெரியாத ஆள்கள் இந்தப் பருவத்தில் குறைவு. இதை ஒப்பிட்டால் கடந்தமுறை பிரபலமானவர்கள் வெகு குறைவு.

இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? எப்படிப் பல நாள்கள் தாக்குப்பிடிக்கப் போகிறார்கள்?

இந்த எதிர்பார்ப்பினால் நிகழ்ச்சியின் மீது ஆரம்பத்திலேயே ஓர் ஆர்வம் தொற்றிக்கொண்டது. பிக் பாஸில் சொன்னதுபோலவே பிக் பாஸ் என்பது நிகழ்ச்சி மட்டுமல்ல, அது ஒரு எமோஷன்.

*

பிக் பாஸ் எட்டை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

முதல் 50 நாள்கள் ஆண் - பெண் எனப் பிரித்து வீட்டுக்கு நடுவே கோடு கிழித்து பிரித்து இரு அணிகளாக மோதவிட்டு நடந்த முதல் பகுதி.

அடுத்த 56 நாள்கள் கோட்டை அழித்துவிட்டு எல்லோரையும் சமமாக்கி வழக்கமான பிக்பாஸ் போல் தனி நபர் ஆட்டமாக நடந்த இரண்டாம் பகுதி.

ஆண்கள் அணியில் இருந்த மூத்தவர்கள் ரஞ்சித், ரவிந்தர் தலைமையில் எல்லா ஆண்களும் ஒரே அணியாக, ஆதி மனிதனின் வேட்டைக் குழுவை போல் ஒரே சிந்தனையில் இணைந்தார்கள். அருண், சத்யா, தீபக், ஜெஃப்ரி, விஷால், ரஞ்சித் போன்ற பலரும் தங்கள் தனி அடையாளத்தை வெளிப்படுத்தாமல் அணியாக யோசிக்கத் தொடங்கினார்கள்.

பெண்கள் பக்கம் இருவர் மூவராகப் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்தார்கள். ஜாக்குலின் வந்த அன்றே முதல் நாளிலேயே பெண்கள் அணியின் முடிவைக் குற்றம் சொல்லி சச்சரவை ஆரம்பித்து வைத்தார்.

பெண்கள் அணி ஒரு கட்டத்தில் ஒற்றுமை ஒற்றுமை எனச் சொல்லி சொல்லி ஒரே அணியாக மாறுகிற நேரத்தில், கோட்டை அழித்துவிட்டு ஒரே அணி என்கிற விதிமுறையையே நீக்கினார் பிக் பாஸ்.

வழக்கமான பிக் பாஸ் ஆட்டம் கடைசி 56 நாள்களில் நடைபெற்றது.

பணப் பெட்டி சுவாரசியம்

பிக் பாஸ் எட்டில் பணப் பெட்டி டாஸ்க் மிக சுவாரசியமாக அமைந்தது. நிகழ்ச்சி பார்க்காதவர்கள் கூட இந்த டாஸ்க்கின்போது அப்படி என்னதான் நடக்கிறது என்று நிகழ்ச்சியை எட்டிப் பார்த்தார்கள்.

(ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம் எல்லாம் வந்த காலத்தால் அழியாத) பிக் பாஸ் ஒன்றில் பணப் பெட்டி டாஸ்க் வைக்கபட்டபோது இறுதிச்சுற்று போட்டியாளர்கள் யாரும் அதைத் தொடவில்லை. அப்படிப் பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியிலிருந்து விலகுவதை இழிவாகப் பார்த்தார்கள். ஜெயிப்போம் என நம்பிக்கை இல்லாதவர்களுக்கான கடைசி வாய்ப்பாக அது பார்க்கப்பட்டது. 2-வது பருவத்திலும் அப்படியே ஆனது. ஐஸ்வர்யாவுக்கு பணப் பெட்டி எடுக்க ஆசை இருந்தாலும் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு எடுக்கவில்லை. 3-வது பருவத்தில் தனக்கான மக்கள் ஆதரவைச் சரியாகக் கணிக்காததாலோ என்னவோ பணப் பெட்டியையாவது எடுப்போம் என ரூ. 4 லட்சத்தை எடுத்துகொண்டு அழுதுகொண்டே வெளியேறினார் கவின் (இப்படி நடுவில் செல்வது ஏன் என்று அதற்கொரு உணர்வுபூர்வமான விளக்கமும் கொடுத்தார்). 4-வதில் ரியோ எடுக்கலாம் என நினைத்து ஒரு பெரிய தொகையாக வரட்டும் எனக் காத்திருக்கும்போதே கேப்ரியல்லா சின்னத் தொகையைத் தூக்கி கொண்டு வெளியேறிவிட்டார். ரியோ எவ்வளவோ கெஞ்சியும் கொடுக்கவில்லை. 5-வதில் பணத்தை எடுப்பது இழுக்கு என மீண்டும் எடுக்காமல் இருந்தார்கள். பத்து லட்சத்தைத் தாண்டி தொகையைக் கூட்டிக்கொண்டே சென்றார் பிக் பாஸ். ஒருகட்டத்தில் சிபி சந்திரன் தன் திடமனதைக் கலைத்துவிட்டு மற்றவர்களிடம் எடுக்கிறீர்களா எனக் கேட்டுவிட்டு யாருமில்லை என்றதும் தான் எடுத்துக்கொண்டார். 6-வதில் இரண்டு பணப் பெட்டிகள் வைக்கப்பட்டன. கதிர், அமுதவாணன் என இருவரும் அவற்றை எடுத்துக்கொண்டார்கள். 7-வதில் பூர்ணிமா பெரிய தொகையை எடுத்துக்கொண்டு ஆட்டத்தை விட்டு வெளியேறினார். மற்ற யாரும் பணத்தின் அருகில் செல்லவில்லை.

இந்தப் பருவத்தில் நிகழ்ச்சியின் நடுவிலேயே பணப் பெட்டி பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் அதன் மேல் விருப்பமும் தெரிவித்தார்கள். பணப் பெட்டி வாரத்துக்கு முந்தைய இருவாரங்களும் இதுபற்றிய பேச்சும் திட்ட அலசல்களும் அதிகமாக இருந்தன. இதைப் பார்த்து பிக் பாஸே பயந்திருப்பார் போல. வழக்கமாக 14-வது வாரம் நடக்கக்கூடிய பணப் பெட்டி டாஸ்க் அந்த வாரம் நடக்கவில்லை. கடைசி வாரத்தில்தான் நடந்தது.

முன்பெல்லாம் நடு வீட்டில் அல்லது நடு கார்டனில் தேமே எனத் திறந்து கிடக்கும் பணப் பெட்டி. இந்தமுறை ஆட்டத்தையே மாற்றினார்கள்.

பிக்பாஸ் வீட்டுக்கு வெளியே எங்கோ தூரத்தில் பெட்டி இருக்கும். கொடுக்கப்பட்ட சில நொடிகளில் அதைத் தூக்கிக்கொண்டு திரும்ப உள்ளே வரவேண்டும். கதவு மூடிவிட்டால் ஆட்டம் முடிந்தது. ஆட்டம் முடிந்ததோடு பெட்டியின் பணமும் கிடைக்காது. ஆனால் நேரத்துக்குள் உள்ளே வந்துவிட்டால் பணமும் உண்டு, ஆட்டத்தையும் தொடரலாம். முதலில் முத்து ஓடிச் சென்று 50 ஆயிரம் ரூபாய் பெட்டியை எடுத்து வர, அடுத்து ரயான், விஷால், பவித்ரா போன்றோர் வெற்றிகரமாகப் பெட்டியை எடுத்து வந்தார்கள். செளந்தர்யா பெட்டியை எடுக்காமலே பயந்து திரும்ப ஓடி வந்தார்.

இப்படியாக பணம் கொடுத்து ஒருத்தரை வெளியேற்ற வேண்டிய பணப் பெட்டி டாஸ்க், அதன் முக்கிய நோக்கமான வெளியேற்றத்தைச் செய்ய முடியாமல் திணறிக்கொண்டிருந்தபோதுதான் ஆபத்பாந்தவனாக ஜாக்குலின் வந்தார். எல்லாருமே ஒரு சுற்று போனதில் ஜாக்குலின் மட்டும் போகாதவர் என்கிற அழுத்தத்துக்குள் சிக்கிக்கொண்டார். அதனால் போயே தீர்வேன் எனத் தீர்மானம் எடுத்தார். இந்தமுறை பணமும் அதிகரித்து ரூ. 8 லட்சம் ஆனது. அதற்கேற்றார் போல் தூரமும் அதிகம், நொடியும் குறைவு. பவித்ராவின் நேரத்தை ஒப்பிட்டு இதை உன்னால் முடிக்க முடியாது என தெளிவாக ஜாக்குலினிடம் கூறி புரியவைக்க முயன்றார் ரயான். பாதி வரை போய்விட்டு திரும்ப வந்துவிடு என்கிற கருத்தை ஜாக்குலின் ஆதரிக்கவில்லை. ஏற்கெனவே செளந்தர்யா பாதியில் திரும்பி வந்து மற்றவர்களின் கேலிக்கு ஆளானார். இந்த நிலையை ஜாக்குலின் விரும்பவில்லை. வசமாக வந்து பிக்பாஸின் கண்ணிக்குள் சிக்கினார். ஓடிப்போய் பெட்டியை எடுத்துத் திரும்புவதற்குள் நேரம் கடந்துவிட்டது. ஆட்டம் முடிந்ததாக அறிவித்த பிக்பாஸ், ஜாக்குலினை வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.

ஜாக்குலின் ஏற்கெனவே நன்றாக அழுவார். இந்த வாய்ப்பில் அசராமல் இரண்டு மணி நேரம் அழ, அதைப் பார்த்து மற்றவர்களும் அழ, முத்துக்குமரன் இதுதான் வாய்ப்பு என இன்னும் சிறப்பாக அழ... அன்று முழுவதும் பிக் பாஸ் வீடே ஓர் அழுகைக் கூடாரமாகிவிட்டது. ஒருகட்டத்தில் ஜெஃப்ரியும், சத்யாவும் பலரின் போலி அழுகையைக் காண முடியாமல் ரெஸ்ட் ரூம் பக்கம் சென்று பகபக என சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இதுதான் இம்முறை வித்தியாசமான பணப் பெட்டி டாஸ்க் முடிந்தவிதம்.

ஏன் தோற்றார் செளந்தர்யா?

சாம்பியன் முத்துக்குமரனுக்குப் பின்னால் வருவோம். செளந்தர்யா ஏன் 2-வது இடம் பிடித்தார்? ஜெயிக்க வேண்டிய போட்டியாளர் அல்லவா அவர்?!

செளந்தர்யா முதல் வாரத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் ஆதரவை பெற ஆரம்பித்துவிட்டார். அவர் அழகாக இருந்தது அந்த ஆரம்ப ஓட்டுகளைப் பெற்றுத் தந்தாலும் 2-வது வாரத்தில் இருந்து அவரது ஆட்டமும் மக்களை வசீகரிக்க ஆரம்பித்தது. வழக்கமான பெண் போல் நடக்காமல் வேறு மாதிரி சிந்தித்து நடப்பது, அதில் ஓர் எளிய அப்பாவித்தனமும் லேசான புத்திசாலித்தனமும் சேர்ந்து எதிராளிக்குப் பிடிபடாத வித்யாசமான ஆட்டமாக இருந்து அட போட வைத்தார். அது அப்படியே பெருகி 2-வது, 3-வது வாரங்களில் மக்கள் ஆதரவைப் பெற்றவராக மாறினார். அதுவும் தரையில் அமர்ந்து தர்ணா செய்தபோது ஆதரவு உச்சத்தை நோக்கி சென்றது.

விஜய் சேதுபதியில் ஆரம்பித்து மக்களின் கைத்தட்டுகள், ஆதரவு எல்லாமே செளந்தர்யாவுக்கு ஆதரவாகத் திரும்ப குறிப்பிட்ட வாரங்களில் பிக் பாஸின் நெ.1 ஆட்டக்காரராக இருந்தார். ஹோட்டல் டாஸ்க் முடிந்த வாரத்தில் மக்களின் ஏகோபித்த ஆதரவைக் கண்டு ஜாக்குலின், செளந்தர்யாவுடனான உறவைப் புதுப்பிக்க ஆரம்பித்தார். வெளியே நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு உள்ளே வந்த வைல்ட் கார்டு நபர்களும் நிலைமை உணர்ந்து அதற்கேற்றாற்போல நடந்துகொண்டார்கள்.

ரயான் செளந்தர்யாவிடம் நட்பானார். செளந்தர்யா - ரயான் என இருந்த நட்பில் ஜாக்குலினும் ஜெஃப்ரியும் இணைய கோவா கேங் என்கிற குழு உருவானது. இது ஸ்கூல் டாஸ்க் நடந்த வாரத்தை ஒட்டி நிகழ்கிறது. அதன்பிறகு செளந்தர்யாவின் தனித்தன்மை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கோவா கேங் குழுவின் ஆட்டம் பெரிதானது. அந்தப் புள்ளியில் இருந்து செளந்தர்யாவின் ஆட்டம் சறுக்க ஆரம்பித்தது. கிட்டத்தட்ட கோப்பையை இவரே வெல்வார் எனப் பலரும் நம்பியிருந்த நிலையிலிருந்து 2-வது இடமாவது கிடைக்குமா என்கிற நிலைக்கு செளந்தர்யா வர கோவா கேங்கின் அணுகுமுறையே காரணம். ஒருகட்டத்தில் விஜய் சேதுபதியின் அறிவுரையைக் கேட்டு அந்தக் குழுவை விட்டு வெளியே வந்தாலும் அவரால் பழையபடி முழுதாகத் தனித்து விளையாட முடியாமல் போனது. கடைசிவரை கோவா கேங்கின் அழைப்பு வந்துகொண்டே இருந்தது. கடைசிவரை செளந்தர்யாவால் முத்துவைத் தாண்டவே முடியாமல் போனது. அவரை மேடையில் வைத்துக்கொண்டே முதலிடம் பிடித்தார் முத்துக்குமரன்.

எதனால் பிக் பாஸ் 8 வித்தியாசமானது?

கடைசி நாளில் போட்டியாளர்கள் அனைவரும் இணக்கமாகப் பேசி மகிழ்ந்து நெகிழ்ந்து ஒன்றாகக் கொண்டாடி பிரிந்ததைக் கண்டபோது, இதை முந்தைய பருவங்களில் பார்த்ததில்லையே என்று தோன்றியது. எல்லா வருடங்களிலும் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இடையே ஆறாத வடு இருக்கும். கடைசி நாளில் கூட தனக்கு ஆகாத குழுவின் வெற்றியை வன்மம் கொண்டு பார்ப்பார்கள்.

இதெல்லாம் பார்த்துவிட்டு இந்தப் பருவத்தில் 22 பேரும் (அருண், ஜாக் தவிர்த்து... அவர்கள் இருந்திருந்தாலும் இந்த உற்சாகம், ஒற்றுமை மாறியிருக்காது) ஒன்றாகக் கூடி மகிழ்ந்ததைப் பார்ப்பது மனதுக்கு நிறைவாக இருந்தது. தீபக் போன்றவர்கள் செய்த சின்னச் சின்ன சுவைகூட்டல்கள் ஒற்றுமைக்கு மேலும் அழகு சேர்த்தது. கடைசியில் எல்லாரும் மொத்தமாக வெளியேறாமல், அவர்கள் வெளியேறிய வரிசையிலேயே சில வார்த்தைகள் பேசி ஒவ்வொருவராகச் செல்ல திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தார். அப்படி ஒவ்வொருவராகப் பேசிவிட்டு வெளியே சென்றது அழகாக இருந்தது மட்டுமல்லாமல், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த வீட்டின் கடைசி நிமிடத்தில் தங்களுக்கான ஒரு தருணத்தை எடுத்துச் செல்ல உதவியது. மிஞ்சியிருந்த கசப்பையும் அங்கேயே விட்டுவிட்டு நிறைவாகச் சென்றதைக் காணமுடிந்தது.

இனி எந்த பிக் பாஸில் இந்த ஒற்றுமையை, சகோதர, நட்புப் பாசத்தைக் காண முடியும்?

பிஆர் வேலைகள்!

இந்த முறை அதிகம் புழங்கிய வார்த்தை பிஆர் என்கிற மக்கள் தொடர்புப் பணிகள். யாரைக் கேட்டாலும் அவர் பிஆர் வைத்துள்ளார், இவர் பிஆர் வைத்துள்ளார் என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் 106 நாள்களுமே பறந்தன.

பிஆர் என இவர்கள் குறிப்பிடுவது வெறுமனே மக்கள் தொடர்பு மட்டுமேயல்ல, இங்கு பிஆர் என்பவர், உள்ளே உள்ள போட்டியாளருக்காக வெளியே சமூகவலைத்தளப் பக்கங்களில் ஆதரவை திரட்டும் பணிகளை இடைவிடாது செய்பவர். பிஆர் என்பவர் ஒரு நபர் அல்ல. ஒரு நபர் தலைமையில் உள்ள ஓர் அணி என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இந்த பிஆர் அணி தங்களுடைய போட்டியாளர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் விதந்தோதி பதிவாகவோ, மீம் ஆகவோ பரப்பலாம், அல்லது யூடியூப் வீடியோக்கள் மூலமாக ஆதரவுக் கருத்துகளைத் திரட்டலாம். போட்டியாளர்களின் நண்பர்களோ அல்லது உறவினர்களை இந்த வேலைகளை இலவசமாகச் செய்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.

ஆதரவாக மட்டும் பதிவு போடாமல் எதிர்மறையாகவும் சமூகவலைத்தளங்களில் சக போட்டியாளர்கள் மீது பழி சுமத்துகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் இம்முறை பலமாக அடிபட்டது. இவர்கள் வகுக்கும் பாதையில், எடுத்துக் கொடுக்கும் புள்ளிகளை வைத்து சமூகவலைத்தளங்களில் களமாடும் சாதாரண ரசிகர்களும் வாதங்களை வளர்த்துவிடுவார்கள். வன்மத்தீ பற்றிக்கொண்டு எரியும். இதில் பலமான பிஆர் கொண்ட போட்டியாளருக்கு மற்றவர்களை விட ஒரு படி மேலான ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு உருவாகிவிடுகிறது. பிஆர்களின் முக்கியமான வேலை, எடிட்கள் எனச் சொல்லப்படும் குறுங்காணொளிகளை சமூகவலைத்தளங்களில் பரப்புவது. செளந்தர்யா க்யூட் என ஆரம்ப வாரங்களில் பரப்பப்பட்ட அவருடைய அழகிய தருணங்களைக் கொண்ட ரீல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. செளந்தர்யா - ரயான் நட்பு, செளந்தர்யா- ரயான் - ஜாக்குலின் நட்பு, முத்து - ஜாக்குலின் நட்பு, ராணவ் - பவித்ரா எடிட்ஸ் என ரீல்கள் புதிது புதிதாக வந்தன. இவற்றைத் தயாரித்தது போட்டியாளர்களின் தரப்பா அல்லது ரசிகர்களா என யாருக்கும் தெரியாது. ஆனால் எங்குச் சென்றாலும் அவை கண்ணில் படும்படி நன்கு சுற்றில் விடப்பட்டன. போட்டியாளர்களைப் புகழ்ந்து அனுப்பப்பட்ட ரீல்களும் பதிவுகளும் பிக் பாஸ் ரசிகர்களைக் குழப்பமடைய வைத்தன.

செளந்தர்யாவின் பிஆர்தான் முதலில் அதிகம் பேசப்பட்டது. கடைசியில் அது சர்ச்சையையும் உண்டாக்கியது. அவருமே ஒரு கட்டத்தில் தான் வெளியே பிஆர் வைத்துவிட்டுத்தான் வந்தேன் என நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டார். அன்ஷிதா வெளி உலகைப் பார்த்துவிட்டு திரும்பவும் கடைசி வாரம் உள்ளே வந்தபோது, முத்துவுக்கும் பிஆர் இருப்பதாகச் சொன்னார். அதுவும் உள்ளே என ரவிந்தரைக் காட்டிச் சொன்னார். அதுபோல் ஜாக்குலினுக்கும் பிஆர் இருந்ததாக ஜாக்குலினிடமே நேரடியாகச் சொன்னார். இருவருமே இந்தக் குற்றச்சாட்டை மறுத்துவிட்டார்கள். விஜய் சேதுபதி, மேடையிலேயே ராணவுக்கு பிஆர் இருப்பதாகக் கோடிட்டுக் காட்டினார். பிஆர் என்பது இன்றைய காலத்தின் அவசியம் என்பதாக யாரும் அதை ஏற்றுக்கொள்ளாமல் குறுக்கு வழியில் ஆதரவு திரட்டும் ஓர் உத்தியாகவே பார்த்தார்கள்.

விஜய் சேதுபதி தேர்ச்சி அடைந்தாரா?

கமலிடம் காணப்பட்ட மேம்பட்ட தமிழ் வார்த்தைப் பிரயோகங்களையோ வியப்பூட்டும் உடல் மொழியையோ விஜய் சேதுபதியிடம் காணமுடியாது. அவர் நம்மில் ஒருவராக, சகஜமாக, யதார்த்தவாதியாக வெகுஜன மொழியைக் கொண்டே நிகழ்ச்சியை நடத்தினார்.

ஆரம்ப வாரங்களில் போட்டியாளர்களைப் பேசவிடுவதில்லை, பேசும்போதே வெட்டி விடுகிறார், கடுமையாக விமர்சிக்கிறார், திட்டுவதில் நாகரிகம் பார்ப்பதில்லை எனச் சமூகவலைத்தளங்களில் கமலுடன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி மீது ஏராளமான விமர்சனங்கள் குவிந்தன. நான் கமல் இல்லை என்பதை ஒவ்வொரு வாரமும் உணர்த்தினார் விஜய் சேதுபதி. தான் சரி என்று நம்புவதைச் செய்துகொண்டே இருந்தார். அதற்கு காரணமும் இருந்தது.

போட்டியாளர்கள் பலரும் ஆரம்ப வாரங்களில், தங்களுடைய தவறை மறைக்கவோ, மற்றவர்களை நேரடியாக சுட்டாமல் இருப்பதற்காகவோ வளவள எனப் பேச்சை வளர்த்து நேரத்தை வீணடிப்பார்கள். கடந்த பல பருவங்களில் இதைச் செய்தவர்கள் உண்டு. பிரியங்கா, பூரணி சட்டென்று நினைவுக்கு வருவார்கள். கமலும் கறாராக இருக்க வேண்டாம், பேசுவதற்கான வாய்ப்பை மறுக்கக்கூடாது என முழுதும் பேச வாய்ப்பளிப்பார். ஒரு தந்தையின் பார்வையில் குழந்தைகளைப் பார்ப்பது போல, போட்டியாளர்களை மென்மையாகவும் அக்கறையாகவும் கையாள்வதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொண்ட பல தருணங்கள் உண்டு.

விஜய் சேதுபதி முகத்துக்கு நேராக இந்த உத்தியை வெட்டினார். இதைச் சுத்திவிடுவது எனச் சொல்லி கடிந்துகொண்டார், அவருக்கு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு பாணி. கேட்ட கேள்விக்கு நேரடியான பதில் வேண்டும். தேவைப்பட்டால் பின்னால் விரிவாகப் பேசலாம். யாராவது உண்மையை மறைப்பது, மழுப்புவது எனத் தெரிந்தால் பேச்சை வெட்டிவிட்டு உட்காரச் சொல்லிவிடுவார். தெளிவான பேச்சும், உண்மையும் மட்டுமே அவரிடம் செல்லுபடியாகும். இந்த கறார்த்தனம் முதலில் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டாலும் நிகழ்ச்சி சுவாரசியமாகவும் வேகமாகவும் செல்ல இந்தப் பாணி உதவியது. இதற்குப் போட்டியாளர்களும் ரசிகர்களுமே பழகிக் கொண்டார்கள். 3-வது வாரத்திலிருந்து விஜய் சேதுபதி நிகழ்ச்சியை நடத்திச் செல்லும் விதத்தைப் போட்டியாளர்களும் ஒருவழியாகப் புரிந்துகொண்டு அவர் கேட்டபடி பதிலளிக்க ஆரம்பித்தார்கள்.

விஜய் சேதுபதி ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டே வருகிறார் என்பது ரசிகர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. சமூகவலைதளங்களில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும் வார இறுதியில் பதில் கிடைத்தது. விஜய் சேதுபதி கண்ணில் சிக்காதது எதுவுமில்லை என்கிற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஒருபடி மேலே போய், ரசிகர்கள் கவனிக்காத விஷயங்களையும் கவனித்துக் கேள்வியெழுப்பினார், தீப்பெழுதினார் விஜய் சேதுபதி.

முதல் வாரத்தில் பிராங்க் பிரச்னை ஒன்றில் ரவிந்தர்தான் தவறு செய்தார் என எல்லாரும் சேர்ந்து அடிக்க, ரவிந்தரும் ஒரு கட்டத்தில் அதுதான் உண்மை என நம்பி மன்னிப்பெல்லாம் கேட்டுவிட்டார். ரவிந்தர் நியாயஸ்தர் என்று சொல்ல ஒருவரும் இல்லாத நேரம். ஆனால் விஜய் சேதுபதி தான் ரவிந்தரை நிரபராதியாகப் பார்த்தார். நடந்த உண்மையைச் சொல்லி ரவிந்தர் குற்றமற்றவர் என விடுவித்தார். டிடிஎஃப் (Ticket To Finale) வாரத்தில் மண்டிரம் (Man + Drum = Mandrum) டாஸ்க்கில் முத்துகுமரனின் படம் முழுவதும் கிழிக்கப்பட்ட பிறகும் அது இது எனப் பல காரணங்கள் சொல்லி அருகிலிருந்தவர்கள் மனதைக் குழப்பி படத்தைத் திரும்ப ஒட்டிக்கொண்டார். இதையும் யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால் விஜய் சேதுபதி இதற்கு முறையாக விசாரணை நடத்தி தீர்ப்பை வழங்கினார். பிக் பாஸில் யார் கண்ணில் சிக்காத சங்கதி என்று ஒன்று கிடையாது. இதை மாற்றிக்காட்டினார் விஜய் சேதுபதி.

அடுத்த வருடம் கமல் மீண்டும் வந்துவிடுவாரா என்று தெரியாது. விஜய் சேதுபதி மீண்டும் வந்தால் நல்லது.

முத்துக்குமரன் வெற்றிக்குத் தகுதியானவரா?

இப்போது, பிக் பாஸை வென்றவரைப் பார்த்துவிடுவோம்.

முத்துக்குமரன் இந்த வெற்றிக்குத் தகுதியனவரா என்றால், ஆம். முற்றிலும் தகுதியானவர்தான். 2-வது வாரத்தில் ரவிந்தர் வெளியே சென்றதும் ஆண்கள் அணி எப்படி முன்னே செல்வது என்று தடுமாறியபோது, முத்து பல யோசனைகளைக் கூறி ஆட்டத்தின் போக்கை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அவருடைய பெரும்பாலான யோசனைகளும் சரியானதாக இருக்க, ஆண்கள் அணி அவற்றை பின்பற்ற ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் முத்து மட்டுமே யோசனை சொல்கிறார், முத்து மட்டுமே பேசுகிறார் எனத் தேவைக்கு அதிகமாக வெளியே தெரிய, இதையே ஒரு குற்றச்சாட்டாக எதிரணியும் வைக்க, விஜய் சேதுபதியும் அதை வாரயிறுதி நிகழ்ச்சிகளில் கடுமையாக விமர்சித்தார். அப்போதே முத்துவின் ஆளுமையும் தவிர்க்க முடியாத சக்தியும் ரசிகர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.

ஆண்கள் அணியில் விஷால், அருண் எல்லாம் முத்துவைத் தட்டி வைக்க முயன்று அவருடைய முக்கியத்துவத்தைக் குறைக்கப் பார்த்தார்கள். நடுவில் முத்துவும் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார். இதற்குள் முத்து மீதான ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க ஆரம்பித்தது. முத்துவிடமிருந்து வந்து விழும் சொற்கள் அவ்வளவு சக்திமிக்கதாக இருந்தன. அதேசமயம் தனிப்பெரும்பான்மையாக ஜெயித்துவிடுவார் என்கிற நிலைமையும் இல்லை. அந்தப் பக்கம் செளந்தர்யா கிட்டத்தட்ட சம அளவில் இருந்தார்.

முத்துக்குமரனின் இந்தப் பயணத்தில் அவரை இன்னும் ஒரு படி உயர்த்தியது செங்கலா டாஸ்க் தான். அதில் முத்து வகுத்த திட்டங்கள், போட்டியாளர்களை அணியாக ஒன்று சேர்த்தது, முன்வைத்த வாதங்கள், முக்கியமாக கடுமையான உடல்திறனைச் செலுத்தி விளையாடியது எல்லாமே அவரை கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்தியது. அதன்பிறகு முத்து திரும்பிப் பார்க்கவே இல்லை. போட்டியின்றி வெல்வார் என்கிற நிலைமைக்குச் சென்றார். முத்து முன்னேறுவதை செளந்தயா அவ்வளவு சுலபத்தில் விடமாட்டார் எனக் கணிக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தை முத்து எப்படிச் சமாளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் திருப்பம் நிகழவே இல்லை.

முத்துவின் ஆட்டம் மிகத்தெளிவாக, தீர்க்கமாக முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்று. ஒவ்வொரு வாரமும் தான் என்ன செய்ய போகிறோம், எப்படிச் செய்ய போகிறோம், பிரச்னை வந்தால் எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்பதில் அவருக்குத் தெளிவிருந்தது. எல்லா வாரமும் நாமினேஷனில் வந்தால்தான் ஓட்டுப் போட்டு ஓட்டுப் போட்டு மக்கள் பழகுவார்கள் என ஆரம்ப வாரத்திலேயே சொல்லுமளவுக்கு தெளிவும் தைரியமும் அவரிடம் இருந்தன. ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்து முன்னேறுபவன், மிடில் கிளாஸ் பிரதிநிதி என மக்களிடம் நன்றாக செல்லுபடியாகக்கூடிய வார்த்தைகளை திரும்பத் திரும்பச் சொல்லி பதியவைத்து அதையே தன் பிம்பமாகக் கட்டமைத்தார். இதையெல்லாம் ஒருவர் இயல்பாகக் கூறுபவை தானே என்று சொல்லி சாதாரணமாக எண்ண முடியாது. எந்நேரமும் ஆட்டத்தின் நகர்வைத் துல்லியமாக யோசிக்கும் ஒருவனால் மட்டுமே இந்த வார்த்தைகளை சந்தர்ப்பம் பார்த்து உதிர்க்க முடியும், சொல்லியடித்து ஜெயிக்க முடியும் என்கிற உண்மை அவர் பிக் பாஸ் கோப்பையை ஏந்திய தருணத்தில் வெளிப்பட்டது.

- விஷ்வக்சேனன்

கிரிக்கெட், இலக்கியம், பிக்பாஸ் குறித்து எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ‘நிறமற்ற நிறமாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in