பிக் பாஸ் 8 ஆரம்பித்தவுடன் ஒரே நாளில் இளம் நடிகை சாச்சனா வெளியேற்றப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18 போட்டியாளர்களுடன் அக். 6 அன்று தொடங்கியது. இதுவரை 7 வருடங்கள் தொடர்ந்து நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். இந்த வருடம் அவர் விலகியதையடுத்து, விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
இம்முறை முதல் 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என்கிற ஒரு புது விதி அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் பருவத்தில் மட்டுமே ஒரே வாரத்தில் நடிகை அனுயா வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு ஒரு வாரம் என்பது மிகவும் குறைவான காலக்கட்டம் என்பதால் போட்டியாளர்களுக்கு இரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டது. எனினும் சில போட்டியாளர்கள் மட்டும் முதல் நபர் வெளியேறுவதற்கு முன்பே - முதல் பருவத்தில் ஸ்ரீயும் 5-வது பருவத்தில் நமீதா மாரிமுத்துவும் 6-வது பருவத்தில் ஜிபி முத்துவும் 7-வது பருவத்தில் பவா செல்லத்துரையும் சொந்தக் காரணங்களுக்காகத் தானாக வெளியேறினார்கள்.
ஒரே நாளில் ஒருவர் வெளியேற வேண்டும் என்கிற மோசமான விதிமுறை பிக் பாஸில் இம்முறை கடைப்பிடிக்கப்பட்டதால் அதிகமான போட்டியாளர்கள் பரிந்துரை செய்ததன் காரணமாக, மகாராஜா படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா, முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார்.
இதன் மூலம் பிக் பாஸ் வரலாற்றில், முதல் 24 மணி நேரத்தில் வெளியேறிய முதல் போட்டியாளர் ஆனார் சாச்சனா.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் எந்த நாளில் முதல்முறையாக ஒரு போட்டியாளர் வெளியேறினார்?
பிக் பாஸ் 1: நடிகை அனுயா, 7-வது நாள்
பிக் பாஸ் 2: நடிகை மமதி, 15-வது நாள்
பிக் பாஸ் 3: நடிகை ஃபாத்திமா பாபு, 14-வது நாள்
பிக் பாஸ் 4: நடிகை ரேகா, 14-வது நாள்
பிக் பாஸ் 5: மாடல் நாடியா சங், 14-வது நாள்
பிக் பாஸ் 6: நடிகை சாந்தி அரவிந்த், 14-வது நாள்
பிக் பாஸ் 7: நடிகர் யுகேந்திரன் & வினுஷா, 28-வது நாள்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, “எனக்கு யாரையும் வெளியேற்ற விருப்பம் இல்லை, எனவே நான் வெளியேறுவது குறித்துப் பேசினேன். எனக்கும் இந்த பிக் பாஸ் வாய்ப்பு சுலபமாக கிடைக்கவில்லை” என்று கூறி விடைபெற்றார் சாச்சனா.
ஒரே ஒரு நாள் மட்டுமே பிக் பாஸ் இல்லத்தில் இருந்தாலும் அனுதாப அலையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் சாச்சனா. இதனால் சாச்சனாவை பிக் பாஸ் இல்லத்துக்குள் மீண்டும் அனுப்பவேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன. செவி சாய்க்குமா பிக் பாஸ்?