யூடியூப் விமர்சனங்களுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை அனைவரின் கருத்தாக மக்களிடம் கொண்டு செல்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20 அன்று அறிக்கை வெளியிடப்பட்டது.
2024-ல் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள் ஏற்படுத்தியதாகவும், அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக படங்கள் வெளியான முதல் 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
படங்களை விமர்சிப்பது ஒருவரின் கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம்பொதுவாக உத்தரவு பிற்ப்பிக்க முடியாது எனவும், அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி தெரிவித்துள்ளார்.