

ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 3 முதல் வார இறுதியில் உலகளவில் 345 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலைக் குவித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் அவதார் 3 ஆஷ் அண்ட் ஃபயர் கடந்த 19 அன்று வெளியானது. அவதாரின் முதல் பாகம் 2009-ல் வெளியாகி உலகம் முழுவதும் பெரிய வரவேற்பு கிடைத்தது. முதல் வாரத்தில் இப்படம் 241 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 2,162.55 கோடி) வசூல் செய்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தை ஐந்து பாகங்களாக இயக்கத் திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்தார். அதன்படி 2022-ல் அவதார் 2 வே ஆஃப் வாட்டர் படம் வெளியானது.
அந்தப் முதல் வாரத்திலேயே 435 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 3,899.77 கோடி) வசூலித்து பிரமாண்ட ஹிட் கொடுத்தது. அவதார் கொடுத்திருந்த எதிர்பார்ப்பின் காரணமாக அவதார் 2-ன் வசூல் உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து அவதார் 3 ஆஷ் அண்ட் ஃபயர் வெளியானது. இதற்கு, தற்போது உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. முதல் வாரத்தில் இப்படம் 345 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 3,092.77 கோடி) வசூலித்துள்ளது. இது அவதார் படத்தைக் காட்டிலும் அதிகம் என்றாலும் அவதார் 2 ஐ விடக் குறைவு. மேலும், உலகப் புகழ்பெற்ற டிஸ்னியின் மற்ற வெளியீடுகளான ஸூடோபியா 2-ன் வசூல் 497.20 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 4,455.43 கோடி) பார்பி படத்தின் வசூலான 356 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 3,190.89 கோடி) மோனா 2-ன் வசூல் 389 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,488.40 கோடி) ஆகிய வசூல்களை விடவும் குறைவாக வசூலித்துள்ளது அவதார் 3
ஜேம்ஸ் கேமரூனின் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதாலேயே உலகம் முழுவதிலும் ரசிகர்களைக் கொண்டுள்ளண. அவதார் 3-லும் நவீன தொழில்நுட்பங்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அதற்கான முறையான உபகரணங்களுடன் படத்தைத் திரையிட வேண்டும் என்று உலக திரையரங்குகளுக்குக் கடிதம் ஒன்றையும் அவர் எழுதினார். ஆனால், கதைகளத்தில் பெரிய மாற்றம் இல்லாதது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தளவில் முதல் வார இறுதியில் ரூ. 66 கோடி வசூலித்துள்ளது. இதுவும் அவதார் 2-ன் (ரூ. 128 கோடி) வசூலை விடவும் குறைவானதாகப் பதிவாகியுள்ளது.
Hollywood director James Cameron's Avatar 3 has grossed $345 million worldwide in its first weekend.