திரைப்படங்களில் நடிப்பவர்கள் அனைவருமே தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினராக இருக்க வேண்டும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பிஆர்ஓ, தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் நடிகர்/நடிகையர்களின் மேலாளர்கள் ஆகியோருக்கு ஓர் அறிவிப்பை கடிதம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.
விஷால் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் கடந்த பிப்ரவரி 21 அன்று நடந்த கூட்டத்தில் வருகை புரிந்து மதிப்பு வாய்ந்த கருத்துகளைப் பகிர்ந்துகொண்டீர்கள்.
திரைப்படத் துறை சார்ந்த மற்ற அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பினை வழங்குவது போல நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
இனிவரும் காலங்களில் திரைப்படங்களில் கேமிரா முன் நடிக்கும் நடிகர்/நடிகையர்கள் மற்றும் திரைக் காட்சிகளில் வரும் துணை நடிகர்/நடிகையர்கள் அனைவரும் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்க வேண்டும்.
இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்துக்கொண்டிருப்பவர்களிடம் அதனுடைய பயனை எடுத்துரைத்து ஜூன் 20-க்குள் உறுப்பினர் அட்டை பெறும்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று விஷால் கேட்டுக்கொண்டுள்ளார்.