பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு மிரட்டல்: சைபர் கிரைமில் அர்ச்சனா புகார்

"ஒரேயொரு கமெண்டை மட்டும் நான் இங்கு பதிவிடுகிறேன். அது வெளிப்படையாக எனக்கு வந்த மிரட்டல்."
பாலியல் வன்கொடுமை, ஆசிட் வீச்சு மிரட்டல்: சைபர் கிரைமில் அர்ச்சனா புகார்
படம்: https://x.com/Archana_ravi_
1 min read

இன்ஸ்டகிராமில் பாலியல் வன்கொடுமை மற்றும் ஆசிட் வீச்சு மிரட்டல் வந்ததையடுத்து, பிக் பாஸ் புகழ் அர்ச்சனா சைபர் குற்றவியல் காவல் துறையிடம் புகாரளித்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் அருண் பிரசாத் போட்டியாளராகப் பங்கேற்றுள்ளார். கடந்த பிக் பாஸ் பருவத்தில் வெற்றி பெற்ற அர்ச்சனா மற்றும் அருண் பிரசாத் இடையே நல்ல நட்புறவு இருந்து வருகிறது. இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுவதுண்டு.

அருண் பிரசாதுக்கு ஆதரவாக அர்ச்சனா ரவிச்சந்திரன் தனது ஆதரவை வெளிப்படையாகத் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் அருண் பிரசாத் மற்றும் மற்றொரு போட்டியாளர் முத்துக்குமரன் இடையே அவ்வப்போது வாக்குவாதம் எழுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, அருண் பிரசாதுடனான விவாதம் ஒன்றில் கடந்த பிக் பாஸ் பருவத்தின் வெற்றியாளர் பேச்சுத் திறமையால் வெற்றி பெற்றதாக முத்துக்குமரன் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இதுவும் பேசுபொருளானது.

இவற்றின் நீட்சியாக முத்துக்குமரன் ஆதரவாளர் என்ற பெயரில் போலி இன்ஸ்டகிராம் கணக்கு மூலம் அர்ச்சனாவுக்கு ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து அநாகரிகமான கருத்துகளைப் பதிவிட்டு வந்துள்ளார். ஆசிட் வீச்சு, பாலியல் வன்கொடுமை மிரட்டலும் வந்ததையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் மீது சைபர் கிரைமில் அர்ச்சனா புகாரளித்துள்ளார்.

"உங்களுடையப் பெயர் தவறாகப் பயன்படுத்துகிறது என்றால் நீங்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். ஒரேயொரு கமெண்டை மட்டும் நான் இங்கு பதிவிடுகிறேன். அது வெளிப்படையாக எனக்கு வந்த மிரட்டல். இதற்குப் பின்னால் யார் இருந்தாலும், அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இது முத்துக்குமரன் ரசிகராக இல்லாமல் இருந்தால், உங்களுடையப் பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், கவனமாக இருக்க வேண்டும்" என்று அர்ச்சனா எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டார்.

இதற்கு அடுத்தப் பதிவில் ஸ்க்ரீன்ஷாட்டை இணைத்துப் பதிவிட்டுள்ள அவர், "வாழ்க்கை கிரிக்கெட் விளையாட்டைப் போன்றது. முந்தைய ஆட்டத்தில் நீங்கள் விளையாடியிருந்தாலும், உங்களுக்கு விருப்பமான அணிக்காக நீங்கள் ஆதரவை வெளிப்படுத்தலாம். இந்த ஸ்கிரீன்ஷாட் ஓர் உதாரணம் மட்டும்தான். வேதனையளிக்கக்கூடிய கட்டத்தையும் தாண்டிய ஒன்று இது. அடிப்படை ஆதாரமற்ற போலித் தகவல்களை பரப்புவது யாராக இருந்தாலும், சம்பந்தப்பட்ட பக்கம் மற்றும் அதன் அட்மின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அர்ச்சனா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சைபர் குற்றவியல் காவல் துறையிடம் அளித்த புகாரை அர்ச்சனா எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in