ஒரு படத்துக்கு அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல என்று தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம். இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக கலாட்டா யூடியூப் சேனலுக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டியளித்துள்ளார்.
அர்ச்சனா கல்பாத்தி பேசியதாவது:
“ஒரு படத்துக்கு அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல. அது, ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு படம் பார்க்க வருவது போன்ற விஷயம். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையரங்கிற்கு வருவார்கள். ஒரு இயக்குநரால் அவரது எண்ணங்களை வைத்து மட்டுமே படம் எடுக்க முடியும், ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முடியாது. எனவே அதிகமான ஹைப் இருப்பது நல்லதல்ல. அதனால் தான் கோட் படத்துக்கு குறைந்த அப்டேட்களைக் கொடுக்கிறோம். டிரைலரில் படம் குறித்த ஒரு சில துப்புகளைக் கொடுத்தோம். ஆனால், அதனை யாரும் கண்டுப்பிடிக்கவில்லை. எனவே அதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.