ஒருவரின் ரசிகராக இருப்பதால் அவர் என்ன செய்தாலும் அவரை ரசிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று அர்விந்த்சாமி தெரிவித்துள்ளார்.
‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அர்விந்த்சாமி உட்பட பலரும் நடிக்கும் படம் ‘மெய்யழகன்’. இப்படம் வருகிற செப்டம்பர் 27 அன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் தொடர்பாக கோபிநாத்துடன் நேர்காணல் ஒன்றில் பேசினார் அர்விந்த்சாமி.
அர்விந்த்சாமி பேசியதாவது:
“நான் யாருக்கும் ரசிகர் கிடையாது. எனக்கும் யாரும் ரசிகராக இருக்க வேண்டாம். யாராவது என்னைப் பாராட்டினால் கூட அதற்கு என்ன பதில் சொல்வது என எனக்கு தெரியாது. ஒருவருக்கு ரசிகராக இருப்பதால் அவர் என்ன செய்தாலும் அவரை ரசிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சிவாஜியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் நடிப்புக்கு நான் ஒரு ரசிகன். ஆனால் அவர் நடித்த ஒரு சில படங்கள் எனக்கு பிடிக்கவில்லை. இதை சொல்வது என்னுடைய சுதந்திரம்.
என்னிடம் ரசிகர் மன்றம் தொடங்குவது குறித்து யார் வந்து கேட்டாலும், வேண்டாம் என்று தான் சொல்லுவேன். என் மகன் என்னிடம் வந்து ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேரப் போகிறேன் என்று கேட்டால் போய் வேலையைப் பார் என்பேன். என் ரசிகர்களுக்கும் அதே தான். என் பையனுக்கு ஓர் அறிவுரை, அடுத்தவருடைய பையனுக்கு இன்னொரு அறிவுரையை என்னால் எப்படிக் கொடுக்க முடியும்? எனக்கு ரசிகர் மன்றம் குறித்து சரியான புரிதல் இல்லை. ஒருவேளை எனக்கு அது புரிந்தால், நானும் தொடங்குவேன். மற்ற நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எனக்கு எந்த கருத்தும் இல்லை. ஆனால், எனக்கு இதுபோன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை”.
இவ்வாறு அவர் பேசினார்.