தனது திருமண முறிவு குறித்து ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்த சிலமணி நேரங்களுக்கு முன்பு, அவருடைய இசைக்குழுவில் பணியாற்றும் மோஹினி டே என்பவர் தன்னுடைய கணவரைப் பிரிவதாக தகவல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானைப் பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவித்ததைத் தொடர்ந்து, 30-வது ஆண்டு திருமண வாழ்வை எட்டுவோம் என எதிர்பார்த்த நிலையில் அனைத்தும் முடிவுக்கு வந்துள்ளதாக ஏ.ஆர். ரஹ்மானும் உருக்கமாக தெரிவித்திருந்தார்.
திருமண முறிவு குறித்து ரஹ்மான் அறிவித்த சிலமணி நேரங்களுக்கு முன்பாக அவருடைய இசைக்குழுவில் பேஸ் கிடார் கலைஞராக உள்ள மோஹினி டே, தன்னுடைய கணவரைப் பிரிவதாக இன்ஸ்டகிராமில் தெரிவித்தார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 29 வயது மோஹினி டே, ரஹ்மானுடன் இணைந்து உலகம் முழுக்க 40-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் பரஸ்பர சம்மதத்துடனே திருமண முறிவு குறித்து முடிவு எடுத்துள்ளதாகவும், இனி வரும் காலங்களில் நாங்கள் நல்ல நண்பர்களாக இணைந்து பணியாற்றுவோம் என்றும் மோஹினி டே தெரிவித்தார்.