நானும், பாலகிருஷ்ணாவும் நீண்ட நாள்களாக நல்ல நட்பையும், பரஸ்பர மரியாதையையும் பகிர்ந்து வருகிறோம் என நடிகை அஞ்சலி கூறியுள்ளார்.
கேங்ஸ் ஆஃப் கோதாவரி என்கிற படத்தின் நிகழ்ச்சி ஒன்று நேற்று முன்தினம் (மே 29) ஹைதராபாதில் நடைபெற்றது. இதில் நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அஞ்சலி, நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் சக நடிகர்கள் ஆகியோர் மேடையில் நின்று கொண்டிருந்தபோது அஞ்சலியை சற்று தள்ளி நிக்குமாறு பாலகிருஷ்ணா சைகை செய்தார்.
இதைத் தொடர்ந்து அஞ்சலி நகர, அஞ்சலியை கையால் சற்று பலமாகத் தள்ளினார் பாலகிருஷ்ணா. அப்படி செய்ததும் அஞ்சலி மற்றும் மேடையில் இருந்த மற்ற நடிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் தள்ளியதும் கீழே விழுவது போல சற்று தடுமாறினாலும், அதன் பிறகு சரியாக நின்று சிரிக்கத் தொடங்கினார் அஞ்சலி.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் ரசிகர்கள் பலரும் பாலகிருஷ்ணாவின் செயலை விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அஞ்சலி தனது எக்ஸ் தளத்தில், “கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்த பாலகிருஷ்ணாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நானும், பாலகிருஷ்ணாவும் நீண்ட நாள்களாக நல்ல நட்பையும், பரஸ்பர மரியாதையையும் பகிர்ந்து வருகிறோம். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.