
வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தின் ப்ரமோ திரையரங்குகளில் வெளியான நிலையில் ரசிகர்கள் உற்சாகமாகக் கண்டு களித்தனர். இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைவதாகவும் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், விசாரணை, வடசென்னை போன்ற படங்களால் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்திருப்பவர் இயக்குநர் வெற்றிமாறன். அவரது அடுத்த படத்தில் சிலம்பரசன் கைகோக்கிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திற்குப் பிறகு வெற்றி மாறனுடன் இணைகிறார் சிலம்பரசன். வெற்றி மாறன் விடுதலை பாகம் 2-க்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார்.
சிம்பு - வெற்றி மாறன் இணையும் படத்துக்கு அரசன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்டரைப் படத் தயாரிப்பாளர் தாணு கடந்த அக்டோபர் 7 அன்று வெளியிட்டார். சிலம்பரசனின் 49-வது படம் இது. தனுஷ் நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வட சென்னை’ படத்தின் கதைக் களத்திலேயே இப்படம் அமையும் என்று கூறப்படுகிறது. படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் திலீப் குமார் ஆகியோர் நடிப்பதாகவும் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக இணைவதாக தகவல் வெளியானது. இன்று அனிருத்தின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அரசன் போஸ்டரில் அவர் பெயர் இணைக்கப்பட்டு வெளியானது.
இந்நிலையில், படத்தின் ப்ரமோ திரையரங்குகளில் இன்று வெளியானது. மாலை 6 மணி அளவில் ப்ரமோ வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பதிவு வெளியிட்டிருந்த நிலையில், நடிகர் சிம்புவும் ப்ரமோவை திரையரங்குகளில் சென்று பாருங்கள் என்று பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து திரையரங்குகளில் வெளியான ப்ரமோவை ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.