அமீரின் 'கொட்டுக்காளி' பேச்சு: வலுக்கும் எதிர்ப்பு!

இப்படத்தை நான் தயாரித்திருந்தால், நான் இதை திரையரங்கிற்கு கொண்டு வந்திருக்க மாட்டேன்.
அமீர்
அமீர்
1 min read

கொட்டுக்காளி படத்தை ஓடிடி தளத்தில் விற்றிருக்க வேண்டும் என்று இயக்குநர் அமீர் பேசியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் போன்ற பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியான படம் ‘கொட்டுக்காளி’.

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

முன்னதாக, இப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுகளை பெற்றது.

இதனிடையே, கொடைக்கானல் மலைப்பகுதியில் அமைந்துள்ள ‘வெள்ளக்கெவி’ கிராமத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘கெவி’ படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (ஆகஸ்ட் 26) நடைபெற்றது.

இதில் கொட்டுக்காளி படம் வெகுஜன படம் கிடையாது என்று இயக்குநர் அமீர் பேசினார். இதற்கு பலரும் தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அமீர் பேசியதாவது

“வாழை வெகுஜன சினிமாவுக்கு பக்கத்தில் இருப்பது தான், அப்படத்தின் வெற்றி. ஆனால், கொட்டுக்காளி ஒரு ஃபெஸ்டிவல் படம். அது வெகுஜன படம் கிடையாது. அதற்காக அது நல்ல படம் இல்லை என்று சொல்லவில்லை.

திரைப்பட விழாவில் திரையிடப்படும் மனநிலைக்காக தயாரிக்கப்பட்ட ஒரு படத்தை, பல சர்வதேச விருதுகளை பெற்ற ஒரு படத்தை, மற்ற வெகுஜன படங்களுடன் போட்டிப் போட வைப்பதே ஒரு வன்முறைதான். அது எனக்கு ஏற்புடையதாக இல்லை.

சர்வதேச விருதுகள் வென்ற ஒரு இயக்குநரை இங்கு 150 ரூபாய் கொடுத்து படம் பார்ப்பவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். பணம் கொடுத்து படம் பார்ப்பதால் மட்டுமே அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள்.

ஒருவேளை இப்படத்தை நான் தயாரித்திருந்தால், நான் இதை திரையரங்கிற்கு கொண்டு வந்திருக்க மாட்டேன். அதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர் ஒரு பிரபல நடிகராக இருக்கிறார். தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி ஏதேனும் ஒரு ஓடிடி தளத்தில் அப்படத்தை விற்றிருக்க வேண்டும்.

படம் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் ஓடிடி தளத்தில் பார்ப்பார்கள். ரசிகர்கள் பணம் கொடுத்து பார்ப்பதால் தான் சர்வதேச விருது பெற்ற படங்களுக்கு இதுபோன்ற விமர்சனம் எழுகிறது”.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத் தொடர்ந்து அமீர் இவ்வாறு பேசியதற்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in