முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே அமரன் படம் வெளியானது என இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்பட பலர் நடித்த படம் ‘அமரன்’. இசை - ஜி.வி. பிரகாஷ் குமார்.
இந்திய நாட்டுக்காக வீர மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்.31 அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது
இந்நிலையில் இப்படத்தில் மேஜர் முகுந்தின் பிராமண அடையாளம் மறைக்கப்பட்டதாகவும், சிஆர்பிஎஃப் வீரர்கள் குறித்த தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் பல எதிர்ப்புகள் கிளம்பின.
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “எனது சொந்த கருத்துகளை படத்தில் திணிக்கவில்லை. இப்படத்தின் சென்சார் அக்டோபர் கடைசி வாரத்தில்தான் நடந்தது. அக்டோபர் 1 அன்று பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஏ.டி.ஜி.பி.ஐ இப்படத்தைப் பார்த்து ஒப்புதல் அளித்தார்கள். மேலும் அவர்களின் பாராட்டுகளும் எங்களுக்கு கிடைத்தது. ராணுவம் தொடர்பான படங்களை எடுக்கும்போது அவர்களின் ஒப்புதல் இல்லாமல் படத்தை வெளியிடவே முடியாது. எனவே, முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே படம் வெளியானது” என்று தெரிவித்துள்ளார்.