புஷ்பா 2: ஃபிளவரா, ஃபையரா, வைல்ட் ஃபையரா?

படத்தின் பலம் அல்லு அர்ஜுன் மற்றும் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு.
புஷ்பா 2: ஃபிளவரா, ஃபையரா, வைல்ட் ஃபையரா?
2 min read

முதல் பாகத்தில் புஷ்பா யார் என்பதை விவரிக்க வேண்டிய தேவை இருந்ததால், கதையில் கொஞ்சம் ஆழம் இருந்தது. இரண்டாம் பாகத்துக்கு அவர் யார் என்கிற விவரிப்பு தேவையில்லாததால், இதைப் பயன்படுத்தி கதையில்/எழுத்தில் சற்று தடுமாறியிருக்கிறார் சுகுமார்.

சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியானது. கதை, திரைக்கதை, உணர்வுகளைக் கையாளுதலில் பெரிதும் கவனம் செலுத்தாமல் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நம்பிக்கையையும் கவனத்தையும் செலுத்தி புஷ்பா -2 படத்தை எடுத்துள்ளார்கள்.

கதையைப் பொறுத்தவரை மரம் கடத்துவது ஒரு கதை. குடும்பத்தினரிடம் தொடர்ந்து அவமானங்களைச் சந்தித்து வருவது மற்றொரு கதை. இவ்விரு கதைகளுக்குத் தேவையான சூழல்களை அவ்வப்போது உருவாக்கி அதற்கான சண்டைக் காட்சிகளைக் கச்சிதமாக வடிவமைத்து ஒரு கமெர்ஷியலான படத்தைக் கொடுத்துள்ளது சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணி.

படத்தின் பலம் அல்லு அர்ஜுன் மற்றும் சண்டைக் காட்சிகள் வடிவமைப்பு. தனது உடல்மொழியிலும், சண்டைக் காட்சிகளிலும், பாடல்களிலும், நடிப்பிலும் அல்லு அர்ஜுன் படத்தைத் தூக்கி நிறுத்தி ஜெயிக்கிறார். படத்தின் பலவீனமும் இதுதான். கதை மற்றும் திரைக்கதை நகர்வாக இல்லாமல், புஷ்பா கதாபாத்திரத்தின் மாஸ் காட்சிகள் மற்றும் அதற்குத் தேவையான முன்கதை போன்ற காட்சிகளின் தொகுப்பாக படம் உள்ளது.

ராஷ்மிகா மந்தனாவுக்கு வெறுமென கவர்ச்சி என்றில்லாமல், இவரைக் கொண்டு கதையில் திருப்புமுனை ஏற்படுவதாக வடிவமைத்துள்ளார்கள். இதுமாதிரியான காட்சிகள் இருப்பதால், முதல் பாகத்தைவிட இதில் ராஷ்மிகாவுக்கு கூடுதல் இடம் உள்ளது. ராவ் எனும் நடிகர் வரும் காட்சிகளும் சுவாரஸ்யத்தை சேர்க்கிறது.

மற்றபடி, படத்திலுள்ள கதாபாத்திரங்கள் எதற்கும் பெரிய அடித்தளம் இல்லை. குறிப்பாக ஃபஹத் ஃபாசில் முதல் பாகத்திலிருந்து தொடர்வதால், இவருக்கும் அல்லு அர்ஜுனுக்கும் இடையிலான போர் அட்டகாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது. இவருடையக் கதாபாத்திரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. தொடர்ச்சியாக, அல்லு அர்ஜுனிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறார். இதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. இந்தக் கதாபாத்திரத்துக்கான முடிவும், முதல் பாகத்திலிருந்த இருந்த மாஸுக்கு நேர்மாறானதாக வந்துள்ளது. வலுவான ஒரு வில்லன் கதாபாத்திரம் என எதுவும் இல்லை.

புஷ்பா கதாபாத்திரத்தால் எதையும் செய்ய முடியும்தான்... ஆனால் குறைந்தபட்ச நம்பகத்தன்மைக்குத் தேவையான காட்சிகளுக்காவது இடமளித்திருக்க வேண்டும். இதற்கான மெனக்கெடல்கள் எதுவும் இல்லாமல் வெறுமென நம்ப வேண்டியதாக உள்ளது. மரம் கடத்துவதில் புஷ்பா புலி என்றாலும், அதை எப்படிச் செய்கிறார் என்பதுதான் நமக்கான சுவாரஸ்யமே. இதில் ஆழமான விவரிப்பு இல்லை.

குடும்பத்தைச் சுற்றி நடக்கும் கதையும் மிகவும் பழையது. கோயிலில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வது, இதனால் நடக்கும் பழிவாங்கல் என ஆதிகாலத்துக் கதையை அடித்தளமாகக் கொண்டு எடுத்து வைத்திருக்கிறார்கள். முதல் பாகத்தில் புஷ்பா யார் என்பதை விவரிக்க வேண்டிய தேவை இருந்தது. இதனால், கதையில் கொஞ்சம் ஆழம் இருந்தது. இந்தப் பாகத்தில் புஷ்பாவுக்கு அறிமுகமே தேவையில்லை. எனவே, எழுத்தில் ஆர்வம் காட்டாமல் மற்ற விஷயங்களில் மட்டும் கபடியாடிருக்கிறார் சுகுமார்.

புஷ்பா -3 படத்துக்கு அடித்தளம் போட்டிருக்கிறார்கள். இதைக் கூடுதல் சுவராஸ்யமாகக் காட்டியிருந்தால், முடிவு இன்னும் அதிரடியானதாக இருந்திருக்கும்.

இப்படி படத்தில் தடுமாற்றங்கள் பல இருந்தாலும், இதைப் பூசி மறைக்க இவர்களிடத்தில் இருந்த ஆயுதம் புஷ்பா மட்டும்தான். இந்த ஆயுதத்துக்குத் தக்க உதவியாகப் பாடல்கள், பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையும் செய்துள்ளார். கூடுதல் பின்னணி இசையை சாம் சிஎஸ் கொடுத்துள்ளார். இருவரும் காட்சிகளுக்குத் தேவையான இடத்தில் மாஸ் உணர்வைச் சரியாகக் கடத்தியுள்ளார்கள். சண்டை வடிவமைப்புக்கு அதிக மெனக்கெடல் போட்டுள்ளது படத்தில் வெளிப்படுகிறது. பெண் கடவுள் வேடமணிந்து அல்லு அர்ஜுன் ஆடும் நடனம், சண்டைகள் தான் படத்தின் உச்சம்.

மொத்தத்தில் கதை, திரைக்கதை, உணர்வுகளைச் சரிவர கையாளுதலில் பெரிய நாட்டம் இல்லை, படம் பார்க்கும் போது மாஸ் பிம்பத்தைக் கொண்ட கதாநாயகன் மாஸாக சண்டைச் செய்தால் பிடிக்கும், இதைச் சுற்றி நடக்கும் குட்டி கதை பிடிக்கும் என்றால் புஷ்பா -2 உங்களுக்கு வைல்ட் ஃபையர். இல்லையெனில் புஷ்பா -2 உங்களுக்கு வெறும் ஃபிளவர்/ஃபையர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in