
புஷ்பா 2 உலகம் முழுக்க 1,871 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
சுகுமார், அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே 100 கோடி ரூபாய் வசூலித்ததாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
படம் வெளியானதிலிருந்து வசூலில் பல சாதனைகளை உடைத்த புஷ்பா 2, உலகெங்கும் 1,508 கோடி ரூபாயை 14 நாள்களில் வசூலித்து இந்த இலக்கை வேகமாக எட்டிய முதல் இந்தியப் படம் என்ற சாதனையைப் படைத்தது. டிசம்பர் மாத தரவுகளின்படி, புஷ்பா 2-வின் ஹிந்தி பதிப்பு, 700 கோடி ரூபாய் வசூலித்தது. ஹிந்தியில் ரூ. 700 கோடியை வசூலித்த முதல் படம் புஷ்பா 2.
ஜனவரி 6 அன்று 32 நாள்களில் இந்தியாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற தகவலை படத்தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டது. அப்போது உலகளவில் 1,831 கோடி ரூபாய் வசூலை புஷ்பா 2 அடைந்திருந்தது.
படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜனவரி 17 முதல் 23 நிமிடங்களுக்குக் கூடுதல் காட்சிகள் சேர்க்கப்பட்டன. ஜனவரி 30 அன்று ஓடிடி தளத்தில் படம் வெளியானது.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த அண்மைத் தகவலை படக் குழு வெளியிட்டுள்ளது. புஷ்பா 2 இதுவரை உலகம் முழுக்க 1,871 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.